அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உள்ளகப்பொறிமுறையிலேயே தீர்வுகள் காணப்பட வேண்டும். வெளியகத் தலையீடுகள் காணப்படும் பட்சத்தில் இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தல் அதிகரிக்கும் நிலைமைகளே ஏற்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மக்கள் 15 ஆண்டுகளாக ஐக்கிய இலங்கைக்குள்ளே கௌரவமாக வாழ்வதற்கு விரும்புகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் உள்நாட்டுக்குள்ளேயே தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாம் விரைந்து எடுத்து வருகின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றின் வினைத்திறனான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவையும் ஸ்தாபிப்பதற்கு விரைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர் நிறைவடைந்து 15 ஆண்டுகளாகின்ற போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ச்சியாக நீதிக்கோரிக்கையை முன்வைத்து வருகின்றதோடு வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகள் நீடித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அதற்கான அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுக்கும் செயற்பாடுகளுக்கு சமாந்தரமாக இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தையும், நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதிலும் நாம் அதிகளவான கரிசனைகளைக் கொண்டிருக்கின்றோம்.
அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். குறிப்பாக, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுப் பணியகம் ஆகியவற்றை வினைத்திறனுடன் செயற்படுவத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதுநேரம் கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் சம்பந்தமாக ஆராய்ந்த நீதியரசர் நவாஸ் தலைமையிலான குழுவின் அறிக்கையும் தற்போது கிடைக்கபெற்றுள்ளது. அதேநேரம், உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படவுள்ளன.
இவ்வாறான நிலையில்ரூபவ் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தினை வழங்குவதில் நாம் கரிசனைகளைக் கொண்டுள்ளோம். அத்துடன் இன முரண்பாடுகளுக்கு முழுமையான தீர்வினை எட்டுவதிலும் கரினைகளைக் கொண்டிருக்கின்றோம். அந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான வகையிலேயே பிரச்சினைகளை கையாள்வதற்கு முனைகின்றோம். குறிப்பாக உள்ளகப் பொறிமுறைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்வினை எட்ட முடியும். வெளியகப் பொறிமுறைகள் பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கப்போவதில்லை.
ஆகவே சர்வதேசத்தினை மையப்படுத்திய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் பிரச்சினைகளே மேலும் அதிகரிக்கும். குறிப்பாக வெளியகத்தாரின் தலையீடுகள் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக இனங்களுக்கு இடையிலான துருவப்படுத்தலையே அதிகமாக்கும்.
எனவேதான், இனங்களுக்கு இடையிலான பிரச்சினை உள்ளிட்ட அனைத்து விடயங்களுக்கும் உள்ள ரீதியிலான தேசியப் பொறிமுறை ஊடாக பயணிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.
இந்த விடயத்தில் தமிழ் மக்களும்ரூபவ் ஏனைய சிறுபான்மை மக்களும் நியாயனதொரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்ற அழைப்பினை நான் பகிரங்கமாக விடுகின்றேன் என்றார்.