இன்று 01.06.2024 சனிக்கிழமை அனைத்துலகப் பொதுத்தேர்வு நாள். ஈழத்திருநாட்டிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பா மற்றும் கனடா போன்ற தேசங்களில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பிள்ளைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் ஆண்டுதோறும் இத்தேர்வு நடாத்தப்படுகிறது.
அந்தவரிசையில் யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழியங்கும் 100க்கு மேற்பட்ட தமிழாலயங்களில் பயிலும் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 12 வரை தமிழ் பயிலும் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்படி அனைத்துலகப் பொதுத்தேர்வில் பங்கேற்கின்றார்கள். ஆண்டு 12இல் கல்வி கற்கும் 268 மாணவர்கள் தேர்வெழுதி, தங்களின் தமிழாலயக் கற்றலை நிறைவு செய்கின்றார்கள்.
யேர்மனியின் தேர்வு நிலையங்களைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவின் திட்டமிடல்களும் பட்டறிவின் பக்குவங்களும் மிகவும் சிறப்பாகப் பொறிமுறை வகுத்து நடாத்துகின்றது. 74 நகரங்களில் சிறப்புத் தேர்வு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 52 நிலையங்களுக்கு முதன்மை மேற்பார்வையாளர்களாக 30 வயதுக்குட்பட்ட இளையவர்களும் ஏனைய நிலையங்களுக்கு வழமையாகப் பணியாற்றும் முதன்மை மேற்பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் 450க்கு மேற்பட்ட துணை மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாண்டு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள தலைமுறை மாற்றமானது கடந்த காலங்களின் தமிழ்க் கல்விக் கழகத்தின் விதைப்பின் விளைவாகும்.
வினாத்தாள் பொதிகளைத் தமிழ்க் கல்விக் கழகத்தின் நடுவச் செயலகத்திலிருந்து பொறுப்பேற்ற நகரம் சார் தேசியச் செயற்பாட்டாளர்கள் அவற்றைப் பாதுகாப்பாகத் தேர்வு நிலையங்களுக்கு எடுத்துச் சென்று, 14:00 மணிக்குத் தேர்வு நிறைவுபெற்ற பின்னர் விடைத்தாள் பொதிகளைக் கண்ணியத்துடன் மீண்டும் நடுவச்செயலகத்திடம் கையளிப்பார்கள். இச்செயற்பாட்டில் தாயமைப்பின் மாநிலப் பொறுப்பாளர்களின் ஒருங்கிணைந்த பணியும் சிறப்பானதாகும்.
தாய்மொழியான செம்மொழித் தமிழைத் தமது பிள்ளைகளுக்குக் கைமாற்றுச் செய்யும் வரலாற்றுக் கடமையைச் செய்கின்ற பெற்றோர்கள் தேர்வு நிலையங்களில் கூடியிருந்த காட்சி பெருமகிழ்வைத் தருகின்றது. தேசத்தின் பெயரைச் சுமந்து தாய்மொழி வளர்க்கும் உயர்ந்த பணியைச் செய்யும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் கூடி உறவாடிய காட்சிகளும் தமிழ்க் கல்விக் கழகத்தின் எண்ணங்களுக்கு வண்ணங்கள் தீட்டிய பெருமிதத்தைத் தந்தன. அகரத்தைச் சிகரமாக்கிய பெருமையுடன் தமிழ்க் கல்விக் கழகக் குழுமம் கைகோர்த்து மகிழும் நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளில் யேர்மனியில் தமிழாலயங்கள் ஊடாக விதைத்த தமிழ், பேச்சாகவும் பாட்டாகவும் கவியாகவும் எழுத்தாகவும் வளர்ந்து உயர்ந்து அடையாளப்படுத்தி நிற்பது தமிழ்க் கல்விக் கழகத்திற்குப் பெருமையாகும். இவ் அறப்பணிக்கு வழிகாட்டியாக இருந்து வளத்தையும் பலத்தையும் தந்த அனைவரையும் இந்நன்னாளில் தமிழ்க் கல்விக் கழகம் நன்றியுடன் கரம் பற்றுகின்றது.