இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தமது எரிபொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைத்துள்ளது.
குறித்த விலை திருத்தத்துடன், லங்கா ஐஓசி நிறுவனமும் அதன் விலைகளை திருத்திய நிலையில், சினோபெக் நிறுவனமும் அதன் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.
வெள்ளை டீசல் லீற்றர் ஒன்றின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.
ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும், சினோபெக் நிறுவனம் விற்பனை செய்யும் ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின் விலை சிபெட்கோ மற்றும் ஐஓசி எரிபொருளின் விலையை விட 3 ரூபாய் குறைவாக உள்ளது.
எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கான எந்தவித சாத்தியம் இல்லை என தனியார் பேருந்து சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இதேவேளை, குறைக்கப்பட்ட எரிபொருள் விலைச் சலுகை தமது சேவைகளுக்கு கிடைக்காத காரணத்தினால் கட்டணத்தை குறைக்கப் போவதில்லை என இலங்கை முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது