சிறிலங்கா பேரினவாதத்தின் ஊதுகுழலான செந்தில் தொண்டமானை முற்றாக நிராகரிப்போம்.

129 0

தமிழின அழிப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டு, தொடர்ந்தும் நடாத்திக் கொண்டிருக்கும், சிறிலங்காவின் சிங்கள பௌத்த பேரிவாத அரசின் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் நீலன்திருச்செல்வம்,லக்ஸ்மன் கதிர்காமர்,சுரேன் ராகவன்,டக்ளஸ் தேவானந்தா வரிசையில் இன்னொரு கோடரிக்காம்பு ஆவார். தன்சார்ந்த தமிழினத்தை அழிப்பதற்கும், தமிழர்களின் பூர்வீக நிலங்களை சிங்களப் பேரினவாதம் அபகரிப்புச் செய்வதற்கும் இவரது பதவியை சிறிலங்கா இனஅழிப்பு நாடு பயன்படுத்துகிறது. அற்ப சலுகைகளிற்காக சோரம்போன தமிழ்க்கட்சித்தலைவர்கள் வரிசையில் செந்தில் தொண்டமான் முன்னணியில் நிற்கிறார் தமிழ் மக்கள் இவ்வகையான புல்லுருவிகளை இனங்கண்டு நசுக்க வேண்டும். 21 ம் நூற்றாண்டில் உலகமே அருவருக்கத்தக்க தமிழின அழிப்பை சிறிலங்கா செய்தது. இதனை அனைத்துலக மனிதவுரிமை அமைப்புகள் தீவிரமாக ஆய்வுசெய்து வருகின்றன. உலகின் பூகோள அரசியல் நிலைப்பாடுகளைத் தாண்டியும் தமிழினஅழிப்பு என்ற குருதிதோய்ந்த வலுமிக்க ஆயுதம் தமிழினத்தை, சிறிலங்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. அனைத்துலகத்தின் மனிதவுரிமை சார்ந்த சட்டங்களின் பிடியில் வலுவாகச் சிக்குண்டு போயிருக்கும் சிறிலங்காவின் இனவாத, இனஅழிப்பு அரசு தனது கறுப்புப் பக்கங்களிற்கு வெள்ளையடிப்பதற்காகவே தமிழர்களிற்கு உயர் பதவிகளை வழங்குகிறது. இதனூடாக அனைத்துலகின் கண்களில் மண்ணை வாரியிறைத்து இன நல்லிணக்கம்,சமத்துவம் என்ற மயக்கம் தரும் கவர்ச்சிகரமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி அனைத்துலக அரசுகளை ஏமாற்றி வருகிறது.

செந்தில் தொண்டமானின் சிங்கள பேரினவாத விசுவாசத்தை பின்வருமாறு பட்டியலிடலாம்.
1)பொருளுகந்த விகாரை தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் அத்துமீறி கட்டப்பட்டது அதிகாரத்தில் செந்தில் தொண்டமான் ஆளுநராக இருந்தும் அதனை தடுப்பதற்கான அதிகாரம் இருந்தும் அதனை அவர் தடுத்து நிறுத்தவில்லை. சிங்கள பௌத்த துறவிகள் ஆளுநர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்தியபோதும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விகாரை கட்டுவதற்கு அனுமதித்தார்.

2)குச்சவெளி மற்றும் திரியாய் கிராமங்களை உள்ளடக்கி 32 விகாரைகள் அமைப்பதற்கான அனுமதி இவராலேயே வழங்கப்பட்டது. அதேவேளை குச்சவெளிப் பிரதேசத்தை சிங்கள பௌத்தர்களின் புனித பிரதேசமாகவும் தொல்லியல் நூதன சாலை அமைப்பதற்குரிய நிதி உதவியையும் இவரது ஆளுகைக்குட்பட்டு வழங்கியிருந்தார்.

3)தமிழர்களுடைய பூர்வீகக் காணிநிலங்கள் தமிழ்க் கிராமங்களிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுடைய காணிகள் உறுதிகள் தயார் செய்யப்பட்டு சிங்களவர்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. 4)திருகோணமலையில் தமிழர்களுடைய பிரதேசங்களில் அத்துமீறிக் கட்டப்பட்ட விகாரைகளுக்காக, இந்திய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வருகையின் போது 1500 மில்லியன் ரூபாய் பெறுமதியான சூரிய மின் உற்பத்தி திட்டங்களுக்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

5)புல்மமோட்டைப் பகுதியில் உள்ள இல்மனைட் தொழிற்சாலை இந்திய நிறுவனம் ஒன்றிற்குக் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது அந்த நிறுவனத்தில் செந்தில் பங்குதாரராக இருப்பதாக சொல்லப்படுகின்றது,
6)தனது சிங்கள பௌத்த ஆதரவு நிலைப்பாட்டை தமிழ்மக்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக கேளிக்கை களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவது ஊக்கப்படுத்துவதோடு, திருகோணமலை வாழ் தமிழ் மக்களுடைய பாரம்பரிய விடயங்களிலும் அத்துமீறி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்.

7)ஊடகவியலாளர்கள் ஊடகங்களை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கிறார்.*திருக்கோணேஸ்வரர் ஆலய விவகாரமும் நீதிமன்றம் வரை சென்று இருப்பதற்கு ஆளுநரும் ஒரு காரணம் எனலாம்.இவ்வாறு மட்டக்களப்பு அம்பாறையிலும் செந்தில் தொண்டமான் தமிழினத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் பலவிதமான செயற்பாடுகளைச் செய்கிறார். கல்முனைப் பிரதேசசபை விவகாரம் முற்றிப்போனதற்கு இவரது அதிகாரத் துஸ்பிரயோகமும், தமிழ்மக்களின் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதுவும் காரணமாகும். தாயகத்தின் நிலவரங்கள் இவ்வாறிருக்க சிறிலங்கா அரசு மிகவும் சூழ்சிகரமாக தமிழ் உயரதிகாரிகளை ஐரோப்பிய நாடுகளிற்கு அனுப்பி பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த நிகழ்ச்சிநிரலில் இந்தக் கோடரிக்காம்பு செந்தில் தொண்டமானும் இணைந்துள்ளார். யூன் மாதம் 26 ம் திகதியளவில் சுவிட்சர்லாந்திற்கு நாட்டிற்கு வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை சிறிலங்காவின் தூதரகம் செய்துள்ளது. சுவிசில் வாழும் வர்த்தகர்களையும், தமிழ் அமைப்புகளையும், குறிப்பாக தமிழ் இளையோர் அமைப்புகளையும் சந்திப்பதற்கான விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்த்தேசியம் சார்ந்து விட்டுக் கொடுப்பின்றி புலம்பெயர் தேசங்களில் செயற்படும் அமைப்புகளினுள் ஊடுருவி தமிழ்த்தேசியச் செயற்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு புலனாய்வுச் சதித்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே சுவிசிற்கான தொண்டமானின் வருகை ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடரிக்காம்பு தன்னைப் போலவே தமிழின உணர்வாளர்களையும் எண்ணுகிறது. சிறிலங்கா பேரினவாதத்தின் ஊதுகுழலான செந்தில் தொண்டமானை முற்றாக நிராகரிப்போம். நாங்கள் கோடரிக்காம்புகளல்ல தேசியத்தலைவரின் சிந்தனை வழிவந்த தமிழினத்தின் மான மறவர்கள் என்பதை மீண்டும் முரசறைவோம். விழிப்பே விடுதலையின் முதற்படி.
*அனைத்துலகச் சிந்தனைப்பள்ளி