சென்னை மாதவரம் தபால்பெட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா. இவர், மாதவரம் கே.கே.ஆர். கார்டன் 1-வது தெருவில் மருந்து கடை நடத்தி வருகிறார்.இவரது மருந்து கடையில், மாதவரம் பால்பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குழந்தைகளை பெற்றெடுத்த தாய்மார்களிடம் இருந்து தாய்ப்பால் வாங்கி அவற்றை பதப்படுத்தி பாட்டில்களில் அடைத்து 30 மில்லி 500 ரூபாய் என அப்பகுதியில் பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சுபாஷ் சந்திரபோஸ், அருளானந்தம் மற்றும் கஸ்தூரி ஆகியோர் நேற்று அந்த மருந்து கடையில் அதிரடியாக சோதனை செய்தனர்.
அதில் 50 பாட்டில்களில் தாய்ப்பால் அடைத்து வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.இது சம்பந்தமாக முத்தையாவிடம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
அவருக்கு தாய்ப்பால் எப்படி கிடைக்கிறது? அவற்றை எவ்வாறு பதப்படுத்தி விற்பனை செய்து வருகிறார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்றது.விசாரணைக்கு பிறகு அவர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
தாய்ப்பால் விற்பனை குறித்த செய்தி அப்பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மருந்து கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடியாக ‘சீல்’ வைத்தனர். மேலும் இது தொடர்பாக முத்தையாவிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தாய்ப்பால் விற்பனை தொடர்பாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த உணவு பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது.
சென்னை மாதவரத்தில் தாய்ப்பால் விற்பனை செய்து வந்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அதிரடியாக மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை மையங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வேறு பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி தாய்ப்பால் விற்பனை செய்பவர்களின் உரிமங்களை ரத்து செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை முழுவதும் தாய்ப்பால் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 18 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.தாய்ப்பால் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் உணவு கட்டுப்பாட்டு துறையிடம் 94440 42322 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.