அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், ட்ரம்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் குரல் கொடுத்துள்ளார்.
“நாட்டின் முன்னாள் அதிபர் இதுபோன்ற விவகாரத்தில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். அதிலிருந்தே தெரிகிறது இந்த தீர்ப்பில் அரசியல் உந்துதல் உள்ளது என்று. இதே நிலை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இது அமெரிக்க சட்ட அமைப்பின் மீதான மக்களின் நம்பிக்கைக்கு பெருத்த சேதமாக அமைந்துள்ளது” என மஸ்க் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 லட்சம் டாலர்களை 2016-ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது. அதை மறைக்க போலி ரசீதுகளை சமர்ப்பித்தது உறுதியானது. இதையடுத்து 12 ஜூரிகள் அடங்கிய குழு அதை விசாரித்து குற்றவாளி என அறிவித்தது.