காசா மீதான போர் இன்னும் ஏழு மாதங்களுக்கு நீடிக்கும் (இந்த ஆண்டு இறுதி வரை) என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 36,224 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
அக்டோபர் 7, 2023-ஆம் ஆண்டு இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை (மே 26) தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரத்தில் தற்காலிக முகாம்கள் மீது இஸ்ரேல் படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையொட்டி நெட்டிசன்கள் “ஆல் ஐஸ் ஆன் ரஃபா” (All eyes on Rafah) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் பரப்பின.
இந்நிலையில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் இப்போது 2024-இன் ஐந்தாவது மாதத்தில் இருக்கிறோம். ஹமாஸ் அமைப்பையும், அதன் அரசாங்கத்தையும் அழிக்க எங்களுக்கு இன்னும் 7 மாத கால அவகாசம் தேவைப்படும். இதனால் போர் குறைந்தது இன்னும் ஏழு மாதங்கள் நீடிக்கும்.
எகிப்து எல்லையில் பெரும் பகுதியை இஸ்ரேல் ராணுவம் கட்டுப்படுத்துவதுடன் ஹமாஸின் ஆயுதக் கடத்தலைத் தடுக்கும் வகையில் அனைத்தையும் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் காசாவில் போர் இந்த ஆண்டு முழுவதும் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 36,224 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 81,777 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 ஆக உள்ளது.