பாலஸ்தீன ஆதரவு வகுப்பு தோழர்கள் பக்கம் நின்ற இந்திய வம்சாவளி மாணவி

36 0

 இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். அந்த வகையில் ஹார்வேர்டு பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டம் மேற்கொண்டனர்.

இஸ்ரேலுக்கு எதிராகவும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் மாணவர்களின் போராட்டம் இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறை கைதும் செய்தது. அந்த வகையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராடிய 13 மாணவர்கள் பட்டம் பெற தடை விதிக்கப்பட்டது.இந்தச் சூழலில் அவர்களது வகுப்பில் பயின்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ருதி குமார், ஹார்வேர்டு பட்டமளிப்பு விழாவில் பேசுவதற்கான வாய்ப்பை பெற்றார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிரான ஹார்வேர்டு பல்கலைக்கழக நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார். மேலும், மாணவர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் இருந்ததையும் சுட்டிக் காட்டினார்.

“இந்த நேரத்தில் பட்டம் பெற முடியாமல் போன 13 மாணவர்களை நான் எண்ணி பார்க்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் பேசினார்கள். பேராசிரியர்கள் பேசினார்கள். ஹார்வேர்டு மட்டும் செவிசாய்க்கவில்லை. காசா விவகாரம் நம் வளாகத்தில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இங்கு கருத்து வேறுபாடு நீடிக்கிறது” என அவர் பேசினார். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஆதரவாக அந்த விழாவை அவரும், சுமார் 1000 மாணவர்களும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

யார் இந்த ஸ்ருதி குமார்? – அமெரிக்காவில் குடியேறிய இந்திய குடும்பத்தை சேர்ந்தவர். நெப்ரஸ்காவில் வளர்ந்தவர். மரியன் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்தவர். அவரது குடும்பத்தில் இருந்து அமெரிக்காவில் பட்டம் பயின்ற முதல் நபர். மனநல கல்வி சார்ந்த தன்னார்வ அமைப்பான ‘கோ யோகி’-யின் நிறுவனர். ஹார்வேர்டு தெற்காசிய மாணவர் சங்கத்தின் தலைவராக கடந்த 2022 முதல் செயல்பட்டு வருகிறார். தமிழ், கன்னடம், ஆங்கில மொழி அறிந்தவர்.