பிரச்சாரத்தின்போது மேயர் வேட்பாளர் சுட்டுக் கொலை

36 0

 மெக்சிகோ நாட்டில் புதன்கிழமை அன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த மேயர் வேட்பாளரான ஆல்ஃபிரடோ கப்ரேரா சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை குரேரோ ஆளுநர் உறுதி செய்துள்ளார்.

வரும் ஜுன் 2-ம் தேதி அதிபர் உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு அந்த நாட்டில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்த எதிர்க்கட்சி கூட்டணி வேட்பாளரான மேயர் வேட்பாளர் ஆல்ஃபிரடோ கப்ரேரா அருகில் வந்த நபர் ஒருவர், அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இந்த சம்பவம் இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது.

இந்த குற்ற செயலில் ஈடுபட்டவர் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்களை அடையாளம் கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டுமென குரேரோ ஆளுநர் தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் முதல் தேர்தலை முன்னிட்டு சுமார் 22 படுகொலை சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் ஆளும் அரசு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகளை கூட செய்ய தவறி உள்ளதாக எதிர்க்கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிஆர்ஐ கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது.

இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 27,000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் புதிய அதிபர், செனட் உறுப்பினர்கள், ஆளுநர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.