நாட்டுக்கு எதிராக ஜனாதிபதி செயற்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம்

36 0

நாட்டுக்கு எதிரான  செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தைத் தோற்றுவிக்கவில்லை.தவறான வழியில் ஜனாதிபதி செயற்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம். அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஆதரவு கிடைக்காது. அரசாங்கத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஜனாதிபதித் தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் இரண்டாண்டுகளுக்கு பிற்போட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ரங்கே பண்டார குறிப்பிட்ட கருத்தின் பின்னணியின் பொதுஜன பெரமுனவின் பஷில் ராஜபக்ஷ உள்ளார் என அரசியல் தரப்பினர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது.

தேர்தல்களை பிற்போடும் கலாசாரம் ராஜபக்ஷர்களுக்கு கிடையாது.தேர்தல்களை உரிய காலத்துக்கு முன்னர் நடத்தி மக்களாணையை உறுதிப்படுத்தினார்கள்.மக்களாணையை கண்டு ராஜபக்ஷர்கள் ஓடவில்லை.தேர்தல்களை பிற்போடவுமில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்தினால் சிறந்த அரசியல் சூழல் தோற்றம் பெறும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம். இருப்பினும் அவர் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் என்று குறிப்பிட்டார்.அதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.எந்த தேர்தலுக்கும் தயாராக இருக்கிறோம்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ஒருவரல்ல பலர் தயாராகவுள்ளார்கள்.பலரில் சிறந்த ஒருவரை தெரிவு செய்வோம்.எமது வேட்பாளரை இந்த மாதம் அறிவிப்போம்.ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்கள் மீண்டும் தோற்றுவிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஜனாதிபதி தேர்தலையும்,பொதுத்தேர்தலையும் பிற்போடுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என  ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் குறிப்பிட்ட கருத்தைத் தானும் அறியவில்லை,தனது கட்சியும் அறியவில்லை என்று ஜனாதிபதியால் பகிரங்கமாகக் குறிப்பிட முடியுமா,?

நாட்டுக்கு எதிரான  செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிக்கவில்லை.தவறான வழியில் ஜனாதிபதி செயற்பட்டால் அரசாங்கத்திலிருந்து விலகுவோம்.அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் ஆதரவு கிடைக்காது.அரசாங்கத்தையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தொடர்பில் எமது கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கெனவே அறிவித்துள்ளார். எமது கட்சியின் கொள்கைக்கு அமையவே நாங்கள் செயற்படுவோம்.தேசிய வளங்களைத் தனியார் மையப்படுத்தும் தீர்மானம் வரும் போது எமது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்றார்.