தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்போது இருக்கின்ற ஒரு சமாதானமான ஒரு நிலைக்கு வரமுடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராஐசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டின் பன்மைத்துவத்தினைப் பேணி இருக்கின்ற மக்கள் அனைவரும் அவர்களை அவர்களே கௌரவிக்கக் கூடிய விதத்திலான அரசியலமைப்பு இல்லாததன் காரணமாக இந்த நாடு மிகவும் சீரழிந்து இருக்கின்றது. எமது நாட்டில் பல பிரச்சினைகள் இருக்கின்றது. காலா காலத்திற்கு வறுமையினைச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நாடாகவே இலங்கை இருக்கின்றது. இங்கிருக்கின்ற வளங்களை, வசதி வாய்ப்புகளை, இங்கிருக்கின்ற பிள்ளைகளை, சொத்துக்களை சரியான முறையில் பயன்படுத்துவதற்கு இன்னும் இலங்கை தயாராக இல்லை. இந்த நாட்டினுடைய மக்களை தமிழர் சிங்களவர், முஸ்லீம் என்று பிரித்து அவரவருக்கு உரிய உரிமைகளை அவர்களுக்கு கொடுக்காமல் எப்போதும் ஒருவரை ஒருவர் தூற்றிக் கதைக்கும் தன்மைதான் எமது நாட்டில் தற்போதும் இருக்கின்றது. ஆரோக்கியமான செயல்கள் நம்முடைய நாட்டில் இல்லை. அதற்கான காரணம் என்னவெனில் ஒரு ஒழுங்கான உறுதிப்பாடான அரசியல் அமைப்பு இங்கு இல்லை.
முப்பது வருட காலம் யுத்தம் இடம்பெற்ற வியட்நாம் நாடு பொது உடமைக் கொள்கை எனும் கொள்கையால் இப்போது அந்த நாடு மிக மகோன்னதமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் பொருளாதாரத்திலே முன்னேறி இருக்கின்றது. எமது இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளை அண்மிக்கப் போகின்றோம் ஆனால் இன்னும் எமது நாடு சொல்லிக் கொள்ளக் கூடிய வகையில் எந்த வித முன்னேற்றமும் அடையாததாக இருக்கின்றது. இதற்கெல்லாம் காரணம் இங்கு ஒரு நிலையான அரசியற் கொள்கை இல்லை. இந்த நாட்டின் பன்மைத்துவத்தினைப் பேணி இருக்கின்ற மக்கள் அனைவரும் அவர்களை அவர்களே கௌரவிக்கக் கூடிய விதத்திலான அரசியலமைப்பு இல்லாததன் காரணமாக இந்த நாடு மிகவும் சீரழிந்து இருக்கின்றது.
அண்மையில் நான் ஒரு செய்தியைப் படித்தேன் 1409ம் ஆண்டுகளில் ஒரு சீன கடற்படைத் தளபதி காளியில் ஒரு பட்டயம் எழுதி வைத்திருக்கின்றார். அது பாரசீக மொழியிலும், சீன மொழியிலும், தமிழ் மொழியும் எழுதப்பட்டிருக்கின்றது. அதில் குறிப்பிட்டுள்ளதாவது தங்களின் இந்த கடற் பயணத்திற்கு இந்துக் கடவுள்கள் அருள் பாலிக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருக்கின்றது.
இதில் நாம் நோக்க வேண்டியது சீனர்கள் காலியில் எழுதிய அந்தப் பட்டயத்தில் தமிழ் மொழியை எழுதியிருக்கின்றார்கள் என்றால் காலியில் அப்போது யார் இருந்திருப்பார்கள். காலியில் தமிழர்களின் ஆதிக்கம் இருந்தமையால் தானே அங்கு தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் ஐந்து ஈஸ்வரங்கள் என்பது வரலாறு அதில் ஒரு ஈஸ்வரமான தொண்டீஸ்வரம் என்பது காலியிலேயே இருந்ததது. இதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஒரு செய்தியும் இருக்கின்றது. காலியில் ஒரு சிவன் ஆலயம் இருந்திருக்கின்றது என்றால் அங்கு இந்துக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் உள்ள இந்துக்கள் எல்லாம் தமிழர்கள் அப்படியாயின் அங்கு தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அவ்வாறு தமிழர்களின் மொழியான தமிழிலே எழுதப்பட வேண்டும் என சீனர்கள் நினைக்கும் அளவிற்கு அங்கு தமிழர்களின் ஆதிக்கம் இருந்திருக்கின்றது. ஆனால் இப்போது நாங்கள் வடக்கு கிழக்கில் கூட நிம்மதியாக வாழ முடியாத நிலைமையில் இருக்கின்றோம்.
இவற்றையெல்லாம் அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் இவ்வாறு வளமும் பெருமையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு இனம் இந்த நாட்டிலே சுய கௌரவத்தோடு வாழக் கூடியதான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் என்கின்ற அந்த எண்ணம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும்.
இந்த செய்தியை வைத்துக் கொண்டு தற்போது இருக்கின்ற இந்த நல்லாட்சியில் இருந்து பெரிய கட்சிகள் சேர்ந்து தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக்கின்ற ஒரு செயற்பாட்டிற்கு வந்திருக்கின்றது. ஆனால் அதற்குள் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் சிறு சிறு குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். நம்மவர்கள் சிலரும் தலைமையை மாற்ற வேண்டும் என்கின்ற குழப்பத்தினை ஏற்படுத்தியவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறான நிலைமையில் தமிழ் மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கும் வகையிலான அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் இப்போது இருக்கின்ற ஒரு சமாதானமான ஒரு நிலைக்கு வருவோம். எனவே இந்த சமாதான நிலைமையைக் காப்பற்ற வேண்டியது மக்கள் அனைவரதும் பொறுப்பு என்பதை மறந்து விடக் கூடாது என்றார்-