படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல்

44 0
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பிரதான வீதி, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான பொது நினைவுத்தூபியில் இவ் நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் தலைமையில் இடம்பெற்றது.

இதன் பொழுது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவுருவபடத்திற்கு, உதயன் குழும தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவனால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடரேற்றபட்டது.தொடர்ந்து ஒருநிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்களால் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஊடகவியலாளர் ஐயாத்துரை நடசேனின் நினைவுரையும் இடம்பெற்றது.

இவ் நினைவேந்தல் நிகழ்வில் யாழ்.மாவட்டத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள், யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவர்கள்  எனப் பலர் கலந்துகொண்டனர்.

2004 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி மட்டக்களப்பில் ஐயாத்துரை நடேசன் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.