புகைத்தல், மதுசார பாவனையை எதிர்த்து மட்டக்களப்பில் விழிப்புணர்வு மரதன் ஓட்டம்

51 0

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது.

மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த மரதன் ஓட்டத்தை நடத்தியது.

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மரதன் ஓட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பினை வலியுறுத்தி, விழிப்பூட்டும் வகையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குகொண்டவர்களின் மீது ‘போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாப்போம்’ எனும் ஸ்டிக்கர்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் ஒட்டப்பட்டது.

அதை தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் கொடியசைத்து மரதன் ஓட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த மரதன் ஓட்டப் போட்டியானது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக அமைந்தது.

“நண்பா, போதைக்கு புகைத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்” எனும் தலைப்பில் இம்முறை சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.