ஜம்முவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி; 40 பேர் படுகாயம்

65 0
பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஜம்மு மாவட்டத்தில் சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 21 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஜம்மு மாவட்டத்தின் சோகி சோரா பெல்ட்டில் உள்ள டாங்லி மோர் என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. 150 அடிக்கு கீழே பள்ளத்தாக்கில் பேருந்து உருண்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

“ஹரியாணாவின் குருஷேத்ரா பகுதியில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி பகுதிக்கு பக்தர்களை ஏற்றிக்கொண்டு இந்த வாகனம் சென்றுள்ளது. விபத்தை அடுத்து, காவல் துறை மற்றும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் அக்னூர் மருத்துவமனை மற்றும் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்”என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

.மோசமான சாலைகள், கண்மூடித்தனமாக வாகனமோட்டுவது, அளவுக்கு அதிகமாக பயணிகளை அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் காரணங்களால் இந்தியாவில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பேரிடர் மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்களின் உதவியுடன் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

அந்த நெடுஞ்சாலையில் இருந்த வளைவைக் கடக்கும்போது ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 40 பயணிகளில் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.