இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைக்கு ஆஜராகாது அதனை அவமதித்தமை தொடர்பில் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக் ஷவுக்கு எதிராக உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு வழக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மூன்றாம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல்செய்துள்ள மேற்படி மனு மீதான பூர்வாங்க விசாரணைகள் நேற்று பிரதம நீதியரசரர் கே.ஸ்ரீ பவன் தலைமையில் நீதியரசர்களான பிரியசாத் டெப், புவனகே அலுவிஹார ஆகிய மூவர் கொண்ட நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே ஆகஸ்ட் மூன்றாம் திகதி முதல் வழக்கை விசாரணை செய்ய தீர்மானிக்கப்ப்ட்டது.இது தொடர்பிலான வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்குத் தொடுநரான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு சார்பில் அதன் பணிப்பாளர் நாயகம் டில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க மன்றில் பிரசன்னமானார்.
சந்தேக நபரான நாமல் ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவின் கீழ் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சம்பத் மெண்டிஸ், பிரேமநாத் தொலவத்த உள்ளிட்டோர் மன்றில் ஆஜரானர்.
கடந்த மே 26 ஆம் திகதிக்கு முன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு முன்னிலையில் ஆஜராகாது நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆணைக் குழுவை அவமதித்துள்ளதாக இதன்போது இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினால் உயர் நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டது.
நாமல் அவ்வாறு ஆஜராகாது இருப்பதற்கான எந்தவொரு ஏற்றுக்கொள்ளத்தக்க காரணிகளும் முன்வைக்கப்ப்டவில்லை எனவும் அத்துடன் விசாரணைகளின் பொருட்டு அவரது சொத்து விபரங்களை காட்டும் விதமாக கோரப்ப்ட்ட சத்திய கடதாசியைக் கூட அவர் ஆணைக் குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை எனவும் நேற்று உயர் நீதிமன்றில் ஆஜரான இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையிலேயே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக அரசியலமைப்பின் 105(3) ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக நடவடிக்கை எடுக்குமாறு உயர் நீதி மன்றை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் தலைவர் டி.பி. விஜேசூரிய எழுத்து மூலம் கோரியுள்ளார்.
இந் நிலையில் இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்க போதுமான ஆதாரங்கள் உள்ளதாகவும் அதன் கீழேயே ஆணைக் குழு நாமலுக்கு எதிராக விசாரணைகளை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்த உயர் நீதிமன்றம் இது குறித்த அடுத்த கட்ட விசாரணைகளை ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.