தோட்டத் தொழிலாளர்களுக்கு இடைக்காலநிவாரணமாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பினைஇரண்டு மாதங்களுக்கான நிலுவையுடன் உடனடியாக வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில்நேற்று நடைபெற்ற விசேட சந்திப்பின்போதே முதலாளிமார் சம்மேளனம் இவ்வாறு இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்கள் இவ்வாறு 2500 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான நிதி உதவியை நிதியமைச்சு அரச வங்கிகள் ஊடாக வழங்க முன்வந்துள்ளது. இலங்கை தேயிலை சபையும் பெருந்தோட்ட நிறுவனங்களும் செய்துகொள்ளவுள்ள உடன்படிக்கைக்கு அமைவாக இவ்வாறு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
இன்றைய தினம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி என்பன பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு இவ்வாறு நிதி உதவியை வழங்கவுள்ளன. இந்த நிலையிலேயே பிரதமருடனான சந்திப்பின்போது இவ்வாறு 2500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்க முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் வெளியிட்டுள்ளது.
அதாவது கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனியார் துறையினருக்கு வழங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட 2500 ரூபா சம்பள உயர்வை வழங்குமாறு அரசாங்கம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்க பணித்தது. அத்துடன் மே மாதம் கூட்டு ஒப்பந்தம்கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச்,ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்களுக்கு இவ்வாறு 2500 ரூபாவை இடைக்கால அதிகரிப்பாக வழங்க பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால் மே மாதம் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை என்பதுடன் 2 மாதங்களாக 2500 ரூபா கொடுப்பனவும் வழங்கப்படவி்லலை. இந்நிலையிலேயே தற்போது குறித்த இரண்டு மாதங்களுக்கான நிலுவைப் பணத்துடன் சம்பள அதிகரிப்பை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அமை்சர்களான மலிக் சமரவிக்ரம நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர். எச்.எஸ் சமரதுங்க பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.