மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் : மௌலவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

79 0

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சந்தேக நபரான மௌலவியை மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு திங்கட்கிழமை (27) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் மௌலவி உட்பட  சிசிடிவி காணொளிகளை அழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாகிய  4 சந்தேக நபர்களும்  மன்றில்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் கடந்த தவணையின் போது 30,26, 22, 23, வயதினையுடைய  4 சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பாகவும் குறித்த வழக்கில்   பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி  உட்பட  ஏனைய தரப்பினரின்  விடயங்களை ஆராய்ந்த நீதிவான் நீண்ட சமர்ப்பணத்தின் பின்னர்  மத்ரஸா பாடசாலை மாணவனின் மர்ம உயிரிழப்பு தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில்  கைதான 4 சந்தேக நபர்களை தலா 10 இலட்சம் ரூபா சரீர பிணை, மாதம் இறுதியில் வரும் ஞாயிற்றுக்கிழமை  சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடுதல், வெளிநாட்டு பயணத்தடை, கடவுச்சீட்டு நீதிமன்றில் பாரப்படுத்தல், குறித்த வழக்கு தவணைகளில் தவறாது ஆஜராகுதல், உள்ளிட்ட பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

மேலும், மற்றுமொரு சந்தேக நபரான மௌலவிக்கு விளக்கமறியல்  நீடிக்கபட்டு   எதிர்வரும்  ஜூன் மாதம் 10 ஆந் திகதி  வரை வழக்கினை ஒத்திவைக்குமாறு கல்முனை நீதிவான்  உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை  வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம்  ஒன்றில் நடாத்தப்படும்  மத்ரஸா ஒன்றில்  கடந்த டிசம்பர் மாதம்  5 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம்  காத்தான்குடி பகுதியை  சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் கல்வி கற்று வந்த   மாணவனே தூக்கில் தொங்கி  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

குறித்த மாணவனின்  மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொதுமக்கள் ஒன்று கூடி குறிப்பிட்ட மதர்ஸாவின் நிர்வாகி மீது தாக்குதல் மேற்கொள்ள தயாராகியதோடு, சாய்ந்தமருது பொலிஸாரால் மத்ரஸா நிர்வாகியாகிய மௌலவி  கைது செய்யப்பட்டுள்ளார்.