ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

48 0

காவிரி ஆற்றில் கடந்த 6 மாத காலமாக கர்நாடக அணையில் இருந்து நீர் திறப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து கடுமையாக சரிந்து வினாடிக்கு 200 கன அடியாக இருந்தது. மேலும் கடுமையான வெப்பம் வீசி வந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்றி வெறும் பாறைகளாக காட்சியளித்து வந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடை மழை பெய்ய தொடங்கியது.

இதனால் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4 மாதங்களுக்கு பிறகு வினாடிக்கு 200 கன அடியில் இருந்து, வினாடிக்கு 3000 கன அடி வரை உயர்ந்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக, கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து தற்பொழுது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை நிலவரப்படி வினாடிக்கு 1500 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

இதனால் ஒகேனக்கல்லில் வெறும் பாறைகளாக வறண்டு கிடந்த இடங்களில் தற்பொழுது தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் செந்நிறத்தில் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியதுடன், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. அதே போல் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.