மஹிந்த ராஜபக் ஷ எடுக்கும் எந்த முயற்சிகளாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை தடுத்து விட முடியாது. அவரின் குந்தகமான செயற்பாடுகளுக்கு சிங்கள மக்கள் உடன்படப்போவதுமில்லை என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலம் எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மேற்படிபாதயாத்திரையினால் தற்போதைய அரசாங்கத்துக்கு நெருக்கடி நிலை ஏற்படுமா? அரசு மேற்கொண்டுவரும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விவகாரத்துக்கு பங்கம் ஏற்படுமா? என அவரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற புரட்சியுடன் துரத்தி அடிக்கப்பட்ட பின் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பதவிக்கு வர பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றார் என்பது உலகறிந்த விடயமாகும்.இந்த முயற்சியின் ஒரு அங்கமே மஹிந்தவும் அவரது அணியினரும் எதிர்வரும் 28 ஆம் திகதி மேற்கொண்ட பாதயாத்திரையை மேற்கொள்ளும் முயற்சியாகும். தற்பொழுது அவர் என்ன கூறுகின்றார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு சிங்கள மக்கள் வாக்களிக்கவில்லை. ஈழ மக்கள் வாக்களித்ததன் காரணமாகவே அவர் வெற்றி பெற்றார்.
அவ்வாறு இல்லையாயின் அவர் வெற்றி பெற்றிருக்க முடியாது என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கின்றார். இது அவரின் ஆற்றாமையையே எடுத்துக் காட்டுகிறது. மஹிந்த இந்த அரசை வீழ்ச்சியடைய செய்வதற்காக பல முயற்சிகளையும் கைங்கரியங்களையும் செய்துகொளண்டுதான் இருக்கின்றார். அது எதுவுமே பலனளிப்பதாகவில்லை. காரணம் சிங்கள மக்கள் இவரின் எதிர்ப்பிரசாரத்துக்கு பலிபோகவில்லையென்பதே உண்மை.
எனவே தான் மஹிந்த ராஜபக் ஷ மேற்கொள்ளும் பாதயாத்திரை முயற்சியும் தோல்வியிலேயே முடியும். இதில் அவர் எதையுமே சாதிக்க முடியாத நிலையே ஏற்படும்.அரசியல் சாசன ஆக்க முயற்சிகள் தடையின்றி சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மஹிந்தவின் பாதயாத்திரை எதிர்ப்பு நிலைகளால் அரசியல் சாசன முன்னெடுப்புகளுக்கு பங்கம் ஏற்படுமென்று கூறிவிடமுடியாது.புதிய அரசியல் சாசனத்தை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவையென்பது பொதுவான நியதி.
அதுமட்டுமன்றி சர்வசன வாக்கெடுப்புக்கு விடப்பட்டு அபிப்பிராயம் பெறப்பட வேண்டுமென்பதும் தேவையான விடயமே. அவ்விடயத்தில் பாராளுமன்றிலும் இலங்கை மக்களிடமும் பூரண ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அரசாங்கத்தின் அரசியல் சாசன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் சந்தேகப்பட வேண்டிய விடயம் ஏதுமில்லை. ஆனால் இம்முயற்சிகளை குழப்புவதற்கு தன்னாலான முழு முயற்சிகளையும் மஹிந்த ராஜபக் ஷ மேற்கொள்வாரென்பது நாம் அறிந்துக் கொள்ளக்கூடிய உண்மைதான்.
அவர் ஒவ்வொரு தடவையும் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறார். அதற்காக நாம் பயந்து கொண்டிருப்பதில் அர்த்தமில்லையென்றே எண்ணுகின்றேன்.புதிய அரசியல் சாசன நிறைவேற்றம் நாம் எதிர்ப்பார்ப்பது போல் குறித்த கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுமென்ற நம்பிக்கை இன்றுவரை எமக்கு இருக்கிறது. நிறைவேற்றுவதுதான் முக்கியமே தவிர அது எக்காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது முக்கியமில்லை.
அரசு மற்றும் எமது கணிப்பின்படி எதிர்வரும் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றுக்கு வருவதற்கு முன் புதிய அரசியல் சாசனம் நிறைவேற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்புடன் தான் அரசியல் சாசன ஆக்கப்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுவரை எவ்வித குறுக்கீடுகளுமின்றி அரசியல் சாசன வரைபு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதென்றே நம்பப்படுகிறது. இதற்கு எந்த தடையீடுகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து அரசு முன்னெடுத்துச் செல்லுமென்றே நம்புகின்றோமென சுமந்திரன் தெரிவித்தார்.