ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும்

227 0

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு கடந்த 3-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, “தமிழக அரசு மே மாதம் 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். இல்லையெனில் கோர்ட்டு நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய திருக்கும்” என்று எச்சரிக்கையும், கெடுவும் விதித்தது.

அதற்கு தமிழக அரசு பதில் அளிக்கையில், “சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை செய்ய இயலாது” என்று கூறி இருந்தது.

மேலும், ’தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை முழுமை செய்யும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை அதனால் தேர்தல் நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்று கூறி மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து ஆகி விட்ட நிலையில், தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவை தளர்த்தி கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் ஜூலை மாதம் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.