சென்னை புறநகர் பகுதிகளில் வாடகை கட்டிடங்களில் அரசு அலுவலகங்கள்:வீணாகும் மக்கள் வரிப் பணம்

264 0

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அரசுக்கு சொந்தமான பல்வேறு காலி இடங்கள் இருக்கின்றன. இருப்பினும், சென்னை புறநகர் பகுதிகளில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் நீண்ட காலமாக வாடகை கட்டிடங்களிலேயே இயங்கி வருகின்றன. இதனால் மக்களின் வரிப் பணம் பல ஆண்டுகளாக வீணாவதை சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியை ஒட்டிய திருவள்ளூர் மாவட்டத்தின் சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி டேங்க் பேக்டரி, திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, பூந்தமல்லி, எஸ்ஆர்எம்சி, மாங்காடு, பூந்தமல்லி போக்குவரத்து காவல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கிடையாது.

அந்த காவல் நிலையங்கள் அனைத்தும் பல ஆண்டு காலமாக பழமையான வாடகை கட்டிடங்களில்தான் இயங்கி வருகின்றன. மேலும், மழைக் காலங்களின்போது இக்கட்டிடங்களுக்கு உள்ளேயும் அடைமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல முக்கிய ஆவணங்கள் மழைநீரில் மூழ்கி சேதமாகிவிடுகின்றன. உதாரணமாக, கடந்த ஓராண்டுக்கு முன் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தின்போது, வாடகை கட்டிடத்தில் இயங்கிய முத்தாபுதுப்பேட்டை காவல்நிலைய கட்டிடம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதேபோல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள காவல்நிலைய கட்டிடமும் வெள்ளநீரில் மூழ்கி, பலத்த சேதமாகிவிட்டது. இதேபோல் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு காவல் நிலையங்கள், ஒவ்வொரு மழைக் காலங்களின்போது வெள்ளநீரில் தத்தளித்தபடி, தங்களது ஆயுளை இழந்து வருகின்றன.

இதுதவிர, ஆவடியில் உள்ள தாலுகா அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகம், ஆவடி கோட்ட மின்வாரிய பொறியாளர் அலுவலகம், திருமுல்லைவாயல் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், தபால் நிலையம், அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் அலுவலகம், ரேஷன் கடைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களில்தான் நீண்ட காலமாக சேதமான நிலையில் இயங்கி வருகின்றன. இதேபோல் அம்பத்தூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், சார்பதிவாளர் அலுவலகம், சென்னை உணவு பொருள் தடுப்பு பிரிவு அலுவலகம், தொலைபேசி இணைப்பகம், ஒரகடம் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், கொரட்டூர் அன்னை நகர், அத்திப்பட்டு, அயப்பாக்கம், அயனம்பாக்கம்  கள்ளிக்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம், ரேஷன் கடைகளும் பரிதாப நிலையில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

சென்னை புறநகர் பகுதிகளில் பல அரசு அலுவலகங்கள் பல ஆண்டுகளாக வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகிறது. அவற்றுக்கு மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. இதற்குப் பதிலாக, அங்குள்ள அரசு நிலங்களில் புதிய அடுக்குமாடி கட்டிடங்களை கட்டி, அதில் அம்மாவட்டத்தின் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்க வழிவகை செய்தால், அரசு மற்றும் மக்களிடம் அனைத்து செலவுகளும் மிச்சமாகும்.
இதுதவிர, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை கட்டிடப் பணிகள் அனைத்தும் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கத் தரப்பில் கேட்டபோது, ‘சென்னை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்தில் அரசு தொடர்பான கட்டிடப் பணிகளுக்கு டெண்டர் விட்டு, ஒப்பந்ததாரர்களை நியமிப்பதற்குள் ஒரு வருடம் ஓடிவிடுகிறது.

அதற்குள் கட்டுமானப் பொருட்களின் விலையும் சர்ரென்று உயர்ந்துவிடுகிறது. உயர் அதிகாரிகளின் அதிகபட்ச கமிஷன் போக, மீதியுள்ள தொகையில் கட்டிடப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தயங்குகின்றனர். இவற்றுக்கு கூடுதல் நிதிக்கான அனுமதி கிடைப்பதற்குள் ஆண்டுகள் பல கடந்துவிடுகின்றன. இதனால் அப்பணிகள் நீண்ட காலம் கிடப்பிலேயே இருக்கின்றன. இச்சூழ்நிலை மாறுவதற்கு, ஆட்சியாளர்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பின்னர் பல்வேறு நெருக்கடிகளால் உயர் அதிகாரிகள் தானாகவே மாறிவிடுவர்’ என்று தகவல் கூறப்படுகிறது. ஆட்சியாளர்களிடம் எப்போது மனமாற்றம் ஏற்படும்? சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.