சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மேலும் 250 டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோடை வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் குடிநீர் தேவை அதிகரித்து வருகிறது. ஏரிகள் வறண்டு போனதால் ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் இருந்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.
சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருதி மெட்ரோ குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓட்டல், தனியார் மருத்துவமனை, மால்களுக்கு வழங்கப்பட்ட குடிநீர் வினியோகத்தை நிறுத்தியது. தற்போது பொது மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. 520 டேங்கர் லாரிகள் தண்ணீர் வினியோகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் தினமும் 5700 நடைகள் (டிரிப்ஸ்) லாரிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படுகின்றன. லாரிகளில் குடிநீர் வினியோகம் செய்த போதிலும் தண்ணீர் தட்டுப்பாடு தீரவில்லை. பொது மக்கள் குடிநீருக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் குடிநீர் வினியோகம் செய்வதற்கு கூடுதலாக லாரிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 250 டேங்கர் லாரிகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதிகரிக்கப்படும் லாரிகள் மூலம் தினமும் 7000 நடைகள் குடிநீர் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் சென்னையில் குடிநீர் லாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
தற்போது 40 இடங்களில் குடிநீர் நிரப்பும் மையம் செயல்படுகிறது. குடிநீர் தேவை அதிகமுள்ள வள்ளுவர் கோட்டம், எம்.ஆர்.சி. வியாசர்பாடி போன்ற பகுதிகளில் உள்ள குடிநீர் நிரப்பும் மையங்களில் ‘‘பாயிண்ட்’’ (போஸ்ட்) அதிகரிக்கப்படுகிறது.
லாரிகளில் தண்ணீர் நிரப்பும் ‘பாயிண்ட்’ அதிகரிக்கப்படுவதன் மூலம் விரைவாக குடிநீர் செய்ய முடியும். கால தாமதம் ஏற்படாது என்று குடிநீர் வாரியம் கருதுகிறது.
இது குறித்து மெட்ரோ குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
எந்தெந்த பகுதியில் குடிநீர் பிரச்சனை நிலவுகிறது. தேவை அதிகரிக்கிறது என்பதை ஆராய்ந்து அதற்கேற்றவாறு வினியோகம் செய்ய 250 டேங்கர் லாரிகள் கூடுதலாக ஈடுபடுத்தப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் கூடுதலாக தண்ணீர் சப்ளை செய்யப்படும். அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் குடிநீர் தேவைப்பட்டால் குறைந்த கட்டணத்தில் வினியோகிக்கப்படும். 6 ஆயிரம் லிட்டர் ரூ.400-க்கும், 9 ஆயிரம் லிட்டர் ரூ.600-க்கும் வழங்கப்படுகிறது.
குடிநீர் வினியோகம் செய்யும் லாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என்பதை கண்காணிக்க ஜி.பி.எஸ். கருவி பயன்படுத்தி கண்காணிக்கப்படும். பொது மக்களுக்கு வழங்க கூடிய குடிநீரை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த கூடாது. அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.