குடிநீர் திட்ட பணிகளுக்கு கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு

252 0

குடிநீர் திட்ட பணிகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குடிநீர் திட்டப்பணிகளுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கூடுதலாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய முதல்வர் உத்தரவிட்டார். மேலும், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு கால்நடை தீவன தேவைகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதலாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மாவட்டங்களில் நடைபெற்று வரும் வறட்சி நிவாரணப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் இதர அரசு நலத் திட்டங்கள் குறித்து மாவட்டங்களில் ஒருவார காலத்திற்குள் கள ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கைகள்   மேற்கொள்ள மாவட்ட அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி நிலையிலான கண்காணிப்பு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.