நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன் கூடிய மழை – மக்கள் பாதிப்பு

57 0

நாட்டில் தற்போது நிலவும்  சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன் கூடிய  மழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை (22) இரவு வீசிய கடும் காற்றினால் வீடுகளின்  கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன

அத்துடன், இன்றும் (23) தொடர்ச்சியாக கடும் காற்றும் மழையும் பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதியில் பல பிரதான வீதியோரங்களில் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன், வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பதாதைகளும் பெயர்ப்பலகைகளும் உடைந்து வீழ்ந்து சேதமடைந்துள்ளன.

நுவரெலியா மத்திய பொது சந்தைக்கு அருகில் இன்று வியாழக்கிழமை (23) அதிகாலை பாரிய மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் குறித்த பகுதியினூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் தடைப்பட்டிருந்தது.

தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்படுவதனால் வாகனங்களை வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டும்.

அத்துடன், தொடர்ந்து  மழையுடனான வானிலை நிலவுவதால் நுவரெலியா மாவட்டத்தில் அதிக பனிமூட்டம் நிறைந்து காணப்படுகிறது. எனவே  அட்டன் – நுவரெலியா ,வெலிமட, கண்டி வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அவதானத்தோடு வாகன விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.