மெலட்டூர், சாலியமங்கலத்தில் பாகவத மேளா: எண்ணெய் விளக்கொளியில் நடந்த நாட்டிய நாடகம்

63 0

ஸ்ரீலஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, பாபநாசம் வட்டம் மெலட்டூர், சாலியமங்கலத்தில் பாகவத மேளா நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. இதையொட்டி, எண்ணெய் விளக்கொளியில் பாரம்பரிய நாட்டிய நாடகம் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த மெலட்டூரில், ஸ்ரீ லஷ்மி நரசிம்ம ஜெயந்தியையொட்டி, பாகவத மேளா நாட்டியநாடக சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பாகவத மேளா நாட்டிய நாடகம் (தெலுங்கு மொழியில்) நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பாகவத மேளா, மெலட்டூர் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் சந்நிதியில் பூர்வாங்க பூஜைகள், அபிஷேகம், ஆராதனையுடன் நேற்று முன்தினம் தொடங்கியது.அன்றிரவு பிரகலாத சரித்திரம்- பாகவத மேளா நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து, 29-ம் தேதி வரை பரத நாட்டியம், குச்சுப்புடி, ஹரிச்சந்திரா நாட்டிய நாடகம், ருக்மணி கல்யாணம், சதி சாவித்திரி நாடகம், வள்ளி திருமணம் (தமிழ்)உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 30-ம் தேதி ஆஞ்சநேய ஆராதனை, பஜனை பாடல்கள், ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் வீதி உலா ஆகியவை நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை சங்க நிர்வாக அறங்காவலர் எஸ்.குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதேபோல, மெலட்டூர் பாகவதமேளா நாட்டிய நாடக அறக்கட்டளை, மெலட்டூர் பாகவத மேளாநாட்டிய வித்யா சங்கம் சார்பில், மெலட்டூர் ஸ்ரீ லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலிலும் நேற்று முன்தினம் இரவு பிரகலாத சரித்திரம் நாட்டிய நாடகத்துடன் பாகவத மேளா தொடங்கியது. இந்த நாடகம் பாரம்பரிய முறையில் எண்ணெய் விளக்கொளியில் நடைபெற்றது.

தொடர்ந்து, வரும் 24-ம் தேதிவரை கலை நிகழ்ச்சிகள், ஹரிச்சந்திரா நாடகம், ருக்மணி கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடைபெற உள்ளன. மேலும், சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு தொடங்கியது.