சிலந்தி ஆற்றில் கேரளா அணை கட்டுவதை சட்டம் மூலம் தடுக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

58 0

சிலந்தி ஆற்றில் கேரள அரசு தடுப்பணை கட்டுவதை சட்டத்தின் மூலம் திமுக அரசு தடுக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: அமராவதி ஆற்றுக்கு வரும் நீரை தடுக்க, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலந்தி ஆற்றில் அம்மாநில அரசு தடுப்பணை கட்டுகிறது.இதுகுறித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வெளியிட்ட அறிக்கையில், ‘சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பிரச்சினை முதல், காவிரி பிரச்சினை வரை மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று போராடுவோம்’ என்று கூறி ஏமாற்றப் பார்க்கிறார்.

காவிரி பிரச்சினை குறித்து திமுக அரசு ஏற்கெனவே தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சட்டரீதியான போராட்டம் நடத்தி, தேர்தல் கூட்டணி அமைத்துள்ள அண்டை மாநில ஆட்சியாளர்களிடம் வற்புறுத்தி, தமிழக உரிமையை நிலைநாட்டுவதை விட்டுவிட்டு, தட்டிக் கழிக்கும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவது, தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அடுத்தவர்கள் மீது வீண் பழி சுமத்தி, தங்களை புனிதமானவர்களாக காட்டி மக்களை ஏமாற்றலாம் என்ற எண்ணத்தை திமுக ஆட்சியாளர்கள் கைவிட்டு, பசுமை தீர்ப்பாயம் மற்றும் சட்டம் மூலம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.