சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்த வட்டுவாகல் பாலத்தை நினைவுகூர்ந்தார் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்

164 0

இறுதிக்கட்டப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வட்டுவாகல் பாலத்தின் நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், இதன்போது காணாமல்போனவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்டதை விடவும் அதிகமாக இருக்கக்கூடும் எனவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகர் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் விரிவான சந்திப்புக்களையும் நடத்தியிருந்தார்.

அதன்படி முள்ளிவாய்க்கால் விஜயத்தின்போது வட்டுவாகல் பாலத்துக்கு அண்மையில் எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை ‘வட்டுவாகல் பாலம்’ எனும் மேற்கோளுடன் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், ’15 வருடங்களுக்கு முன்னர் வட, கிழக்கில் விடுதலைப்புலிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்த பகுதியிலிருந்து  ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் இப்பாலத்தைக் கடந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்குச் சென்றனர். அப்போது இந்த நீர் உயிரற்ற சடலங்களாலும், குருதியினாலும் நிரம்பியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘இறுதிக்கட்ட யுத்தத்தின்போது மிகக்குறுகியதொரு பகுதிக்குள் சுமார் 300,000 தமிழர்கள் அடைபட்டிருந்ததாக மதிப்பிடப்பட்டிருப்பதுடன், போர் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதற்கு முன்னைய சில மாதங்களில் சுமார் 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டறிந்துள்ளது’ எனவும் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த மேலும் ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நேர்ந்தது எனத் தெரியவில்லை எனவும், அவர்களே வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களில் 6 மாதமேயான குழந்தை உட்பட பல குழந்தைகளும், சிறுவர்களும் உள்ளடங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

‘இந்த 30 வருடகால யுத்தத்தில் இருதரப்பினரும் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், சட்டவிரோத , வலிந்து காணாமலாக்குதல்கள், சித்திரவதைகளுக்கு உட்படுத்தல் உள்ளிட்ட மிகமோசமான குற்றங்களைப் புரிந்துள்ளனர். இவற்றால் சுமார் 100,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் என குறைந்தபட்சம் 60,000 பேர் காணாமல்போயுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்’ எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.