செனகல் நாட்டில் முஸ்லீம்கள் ஓய்வு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலி

267 0

செனகல் நாட்டில் முஸ்லீம் மத ஓய்வு இல்லத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செனகல் நாட்டில் தற்காலிகமாக போடப்பட்டிருந்த முஸ்லீம் மத ஓய்வு இல்லத்தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் 22 பேர் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

செனகல் நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள டம்பகண்டா மாகாணத்தின் மெதீனா கவுனாஸ் நகரத்தில் பிரார்த்தணைக்காக கடந்த புதன்கிழமை முதல் மக்கள் கூடிவந்துள்ளனர். அப்போது தீடீரென ஏற்பட்ட தீ மளமளவென பரவியதை அடுத்து அங்கிருந்து வெளியேற எத்தனித்த மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளதாக மூத்த தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேகமாக எரிந்து வந்த தீயால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக மாறியதாகவும், தீ ஏற்பட்டதற்கான காரணம் என்னவென்பது தெரியவில்லை என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்தில் பலர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பயத்தில் அங்கிருந்து வெளியேறிய பலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் சுமார் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கடந்த 2010-ல் இதேபோன்று நிகழ்ந்த வேறொரு விபத்தில் 6 பேர் உயிரிழந்திருந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.