போதுமான கூட்ட நடப்பெண் இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சியினர் கொண்ட வந்த சபை ஒத்திவைப்பு விவாதம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு,சபை நடவடிக்கைகள் எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றம் புதன்கிழமை (22) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது.இதன்போது அரச நிதி முகாமைத்தும் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் தொடர்பான சட்டமூலங்களை ஆளும் தரப்பின் பிரதம கொறடாவாக பிரசன்ன ரணதுங்க சபைக்கு சமர்ப்பித்தார். இதனை தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டின் பொருளாதாரம்,சட்டவாட்சி மற்றும் சட்டம்,ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்தார்.இந்த பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் வழிமொழிந்தார்.
சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் காலை முதல் மாலை 04.15 மணி வரை இடம்பெற்று வந்த நிலையில் ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி ‘சபை நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டு செல்வதற்கு போதுமான உறுப்பினர்கள் சபையில் இல்லை ஆகவே கூட்ட நடப்பெண் பற்றி ஆராய்க என சபைக்கு தலைமை தாங்கிய ஜகத் சமரவிக்ரமவிடம் கேள்வியெழுப்பினார்.
இதனை தொடர்ந்து சபைக்கு தலைமை தாங்கிய ஜகத் சமரவிக்ரம, கூட்ட நடப்பெண் தொடர்பில் ஆராய கோரம் ஒலிக்க அறிவித்தார்.ஐந்து நிமிடங்கள் மணி ஒழித்தது இருப்பினும் போதுமான உறுப்பினர்கள் சபையில் இல்லாத காரணத்தால் சபை ஒத்திவைப்பு விவாதம் இடைநடுவில் நிறுத்தப்பட்டு சபை நடவடிக்கைகளை எதிர்வரும் மாதம் 04 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.