கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளப்போவதில்லை

36 0

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை. ஏனெனில் கடன் மறுசீரமைப்பு செய்யாமல் இருக்கும்வரை கடன் செலுத்த தேவையில்லை.

நாட்டை வங்குராேத்தாக்கிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள  அரசாங்கம் வழிவிட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கம் இந்த காலப்பகுதியில் 75 புதிய சட்டங்களை கொண்டுவந்து அனுமதித்துக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் தெரிவித்திருந்தார்.

அது உண்மை. ஆனால் சட்டங்கள் அனுமதிக்கப்பட்டாலும் அவை முறையாக செயற்படுத்தப்படுவதில்லை. கடந்த சில வருடங்களாக அரசாங்கத்துக்கு விராேதமானவர்களுக்கு மாத்திரமே சட்டம் நிலைநாட்டப்படுகிறது. தற்போதைய பிரதம நீதி அரசர் நல்லாட்சி காலத்தில் சட்டமா அதிபராக இருந்து 42 வழக்குகளை தொடுத்திருந்தார். ஆனால் கோத்தாபயவின் அரசாங்கம் வந்த பின்னர் அந்த வழக்குகளுக்கு என்ன நடந்தது என தெரியாது.

அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாதாரண ஊழியர் ஒருவரை தாக்கியதை நாங்கள் கண்டோம்.

அவர் அவ்வாறு தாக்கியதையும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால் இதுவரை அவருக்கு எதிராக சட்டம் நிலைநாட்டப்படவில்லை. இவ்வாறான சிறிய விடயத்துக்கேனும் அரசாங்கம் சட்டத்தை நிலைநாட்ட வில்லை என்றால் ஏனைய விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திடம் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அத்துடன் அரசாங்கம் தற்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு செல்வதில்லை. ஏனெனில் அங்கு சென்றால், இவர்களுக்கு பதிலளிக்க முடியாது.

இரண்டு வருடங்களுக்கு முன்பே இறுதியாக சென்றார்கள். இதன்போது இலங்கையில் பொருளாார ஊழல் மோசடி இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு இவர்களால் பதிலளிக்க முடியாமல் போனது.

அதன் பின்னர் இன்றுவரை யாரும் அங்கு செல்லவில்லை. ஐக்கிய நாடுகள் சபையுடனான தொடர்புகளை அரசாங்கம் கைவிட்டுள்ளது.

சர்வதேச தொடர்புகளை நிறுத்திக்கொண்டு நாட்டை கொண்டுசெல்ல முடியுமா என கேட்கிறேன். சர்வதேசத்திடன் நன்கொடைகளை பெற்றுக்காெள்வதாக இருந்தால், ஐக்கிய நாடுகளின் நியதிகளை நாங்கள் பின்பற்ற வேண்டும்.

அதேவேளை, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை முடிவுக்கு கொண்டுவரப்போவதில்லை.

ஏனெனில் கடன் மறுசீரமைப்பு செய்யாமல் இருக்கும்வரை கடன் செலுத்த தேவையில்லை. உலகில் எந்த நாடும் இரண்டு வருடங்களுக்கு கடன் மறுசீரமைப்புக்கு செல்லவில்லை. அனைத்து நாடுகளும் ஒருவருடம் அல்லது ஒன்றரை வருடங்களே மறுசீரமைப்புக்கு சென்றிருக்கின்றன.

இது பிச்சைக்காரனின் புண் போன்று, நாடு வங்குரோத்து என தெரிவித்தால் கடன் செலுத்த தேவையில்லை. மறுசீரமைப்பு செய்தால் வருடத்துக்கு 6பில்லியன் செலுத்தவேண்டி ஏற்படுகிறது. அதனால் கடன் மறுசீரமைப்புக்கு செல்லாமல் அரசாங்கம் தேர்தல்வரை இதை இழுத்தடித்துச்செல்லும்.

அதேநேரம் கோத்தாபய அரசாங்க காலத்தில் பொலிஸில் சரணடைந்த 20 பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பு கருதியே பொலிஸில் சரணடைகின்றனர்.

அவ்வாறு இருக்கையில் பொலிஸில் சரணடைந்தவர்கள் கொலை செய்யப்படுவதாக இருந்தால் சர்வதேசத்துக்கு நாங்கள் எவ்வாறு  பதில் சொலவது. ? யுக்திய விசேட பொலிஸ் நடவடிக்கையின்போது, துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை பதவி விலக்குமாறு சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்திருக்கிறது. இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் செய்யுமாறு தெரிவித்திருப்பது, சட்டவிராேதமான கூற்றாகும்.

இவ்வாறு சட்டத்தில் கையில் எடுத்துக்கொண்டு செயற்பட முடியாது. அவ்வாறு செயற்பட்டதாலே தற்போது நாங்கள் தனிமைப்பட்டிருக்கிறோம்.ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல முடியாமல் இருக்கிறோம்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் அரசாங்கம் நடத்தவில்லை. தேர்தலை நடத்த பணம் இல்லை என தெரிவித்து இதனை ஒத்திவைத்திருக்கிறது. இதேபோன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த பணம் இல்லை என்றால்  தேர்தல் ஆணைக்குழு என்ன செய்வது?

அதனால் நாட்டில் நீதி நிலைநாட்டப் படுவதில்லை. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாமல் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. நாடு வங்குராேத்தாவதற்கு பிரதான காரணம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட தவறியமையாகும்.

எனவே நாட்டை வங்குராேத்தாக்கிய அரசாங்கத்துக்கு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது. எந்த தேர்தலை நடத்துவது என அரசாங்கத்துக்கு தெளிவான அறிவிப்பொன்றை செய்ய முடியாமல் இருக்கிறது. இதனால் முழு நாடும் அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள  அரசாங்கம் வழிவிட வேண்டும் என்றார்.