பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம் என்பன முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற அமர்வின் போது ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான பிரசன்ன ரணதுங்க சட்டமூலங்களை சபைக்கு சமர்ப்பித்தார்.
பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம்
சிறந்த பேரினப் பொருளாதார முகாமைத்துவத்துக்காக நிதிக் கொள்கையை மேம்படுத்தும் நோக்கில் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ கட்டமைப்பில் பகிரங்க நிதிகளின் பொறுப்புக்கூறல், மேற்பார்வை செய்தல், முகாமைத்துவம் செய்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் என்பனவற்றை வலுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும், நிதிசார் முகாமைத்துவத்துடன் தொடர்புப்பட்ட நிறுவனம் சார் பொறுப்புக்களை தெளிவுப்படுத்துவதற்கும், வரவு செலவுத் திட்ட முகாமைத்துவத்தினை வலுப்படுத்துவதற்கும், நிதிக் கொள்கை மற்றும் நிறைவேற்றத்தின் பொதுமக்கள் ஆராய்வுகளை வசதிப்படுத்துவதற்கும், 1971 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க, நிதிச் சட்டத்தின் பாகம் 2 இன் 8 ஆம் மற்றும் 14 ஆம் பிரிவுகளை நீக்குவதற்கும், 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்பு) சட்டத்தினை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலம்
பொருளாதார நிலைமாற்றம் மீதான தேசியக் கொள்கைகளை ஏற்பாடு செய்வதற்கும், இலங்கை பொருளாதார ஆணைக்குழு, இலங்கை முதலீட்டு வலயங்கள், சர்வதேச வியாபாரத்துக்கான அலுவலகம், தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழு, இலங்கை பொருளாதார மற்றும் சர்வதேச வியாபாரத்துக்கான நிறுவகம் ஆகியவற்றை தாபிப்பதற்கும், 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க,இலங்கை முதலீட்டுச் சபை சட்டத்தை நீக்குவதற்கும் அவற்றோடு தொடர்புப்பட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடு செய்யும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.