இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் தெரிவித்த விடயங்களிற்கு இலங்கை கடும் கண்டனம்

39 0

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில் இனப்படுகொலை குறித்து குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை இலங்கை வெளிவிவகார அமைச்சு நிராகரித்துள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள கடுமையான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் குறித்து கனடாவிலோ அல்லது உலகின் வேறு எந்த பகுதியிலோ உள்ள தகுதிவாய்ந்த அமைப்பும் புறநிலையான தீர்மானத்தை  அறிவிக்கவில்லை எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய ஆயுத பிரிவினைவாத பயங்கரவாத உள்நாட்டு போரின் இறுதிதருணங்கள் குறித்த இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஐக்கியநாடுகள் சபையின் பிரகடனத்திற்கு முரணாக காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு கனடா உட்பட 33 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நடந்தஇனப்படுகொலை பற்றிய தவறான கதைக்கு கனடா பிரதமரின் ஒப்புதல் கனடாவில் உள்ள இலங்கை வம்சாவளியினரிடையே நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றது எனவும் இலங்கையின்வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையின் அனைத்து சமூகங்களையும் சேர்ந்தவர்களும் மோதல்களால் பாதிக்கப்பட்டனர் வடக்குகிழக்கில் உள்ள தமிழர்கள் விடுதலைப்புலிகளின் ஒடுக்குமுறைகளால் அளவுக்கதிகமாக பாதிக்கப்பட்டனர் விடுதலைப்புலிகளின் ஈவிரக்கமற்ற பயங்கரவாத நடவடிக்கைகளால்  அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு கனடா பிரதமரின் பாரபட்சமான கதை இலங்கை மோதலின் சிக்கலான யதார்த்;தத்தை புறக்கணிக்கின்றது இந்த கருத்துக்கள் இலங்கையர்கள் மத்தியில் பாதகமான விதத்தில் எதிரொலிக்கும் இலங்கையில் தேசிய ஐக்கியம் நல்லிணக்கம் முன்னேற்றத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளை சீர்குலைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.