காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் 2 வழக்கறிஞர்களை நியமிக்கும் நடவடிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை விஜய் தொடங்கினார்.
அப்போதே கட்சியின் பெயர், தலைமை நிர்வாகிகள் பெயர் பட்டியலை பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்தார்.இதனை தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் நடிகர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் நடத்தி பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தனர்.
மேலும், கட்சியில் புதிய உறுப்பினர்களை ஆன்லைன் செயலி மூலம் சேர்க்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருகிறது. இந்நிலையில், காவல் நிலையம் செல்லும் பொதுமக்களுக்கு உதவுவதற்கான பணிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டுள்ளது.
இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கெனவே சட்ட ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக காவல் நிலையம் செல்லும் மக்களுக்கு அதன் நடைமுறைகளைப் பின்பற்ற உதவும் வகையில் வழக்கறிஞர்களை நியமிக்கும் வகையிலான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, மாவட்டந்தோறும் 10 சிறந்த வழக்கறிஞர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கான வழக்கறிஞர்களை நியமிக்கும் பணிகளும் முடிவடைந்துவிட்டன.
இதைத் தொடர்ந்து ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் தலா 2 வழக்கறிஞர்கள் வீதம் ஒரு வார காலத்துக்குள்ளாக நியமிக்கப்படவுள்ளனர்.
அவர்கள் கட்சியின் தலைவர் விஜயை சந்தித்த பிறகு, அதிகாரப்பூர்வமாக வழக்கறிஞர்கள் பட்டியல் வெளியிடப்படும். சட்ட நடவடிக்கைகள் அறியாதோரும், வழக்கறிஞர்களை அணுக முடியாத ஏழை மக்களும் தாராளமாக தமிழக வெற்றிக் கழகத்தை அணுகலாம்.
அவர்களுக்கு எந்த வித கட்டணமுமின்றி சட்ட உதவிகள், காவல்நிலைய நடைமுறைகள் போன்றவற்றை செய்து கொடுக்க கட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார். முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.