நல வாரியங்களில் பதிவு செய்த 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் மாயம்

73 0

முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

தமிழக தொழிலாளர் நலத்துறையின்கீழ் செயல்படும் கட்டுமானம் உள்ளிட்ட உடல் உழைப்பு மற்றும் அமைப்புசாரா நல வாரியங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகங்கள் மூலம் பல்வேறு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதற்கிடையே, கரோனா பேரிடர் காலத்தில் முந்தையஅதிமுக அரசு யாரிடமும் கலந்துபேசாமல், இதுதொடர்பான அனைத்து பணிகளையும் ஆன்லைன்மூலம் மேற்கொள்வதாக தன்னிச்சையாக முடிவு செய்தது. இதனால், கல்வி அறிவு பெறாததொழிலாளர்கள் 40 லட்சம் பேர் புதுப்பிக்க முடியாமல், எந்த பயனையும் பெற முடியவில்லை.

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக தமிழகம் முழுவதும் நல வாரியங்களில் ஆன்லைன் மூலம்74லட்சம் தொழிலாளர்கள் பதிவுசெய்திருந்தனர். இவர்களது தரவுகள், ஆவணங்கள் அனைத்தும் அழிந்துவிட்டதாக கூறி, தொழிலாளர்கள் அவற்றை மீண்டும் ஆன்லைனில் பதிவேற்றம்செய்யுமாறு நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர்.

அனைத்து ஆவணங்களையும் மீண்டும் பதிவேற்றம் செய்வது எளிதான காரியம் அல்ல. தொழிலாளர்கள் இதனால் பெரும் சிரமம், மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

அனைத்தும் டிஜிட்டல் மயம் ஆக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்த ஆன்லைன் பதிவுகள் மட்டும்அழிந்துவிட்டதாக கூறுவது ஏற்புடையது அல்ல. இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு, நல வாரிய தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.