ஊழலுக்கு எதிரான பொறிமுறையைக் கட்டியெழுப்ப வேண்டும்

39 0

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சமூகத்தில் ஊழலை அரச கட்டமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டம் சாதாரண பெரும்பான்மையால் மாற்றப்பட முடியாதவாறு, அரசியலமைப்பின் ஊடாக அதற்கான பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் செவ்வாய்கிழமை (21) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் சமூகத்தில் ஊழலை அரச கட்டமைப்பின் ஊடாக இல்லாதொழிக்க வேண்டும். ஊழல், மோசடி, கொள்ளை போன்றவற்றை தடுக்கும் பொறிமுறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

திருடர்களைப் பிடிப்பதற்கு அதிகாரம் வழங்குமாறு கோருவதற்குப் பதிலாக, ஐக்கிய மக்கள் சக்தி எந்தவித அதிகாரமும் இன்றி எதிரணியில் இருந்து கொண்டே திருடர்களைப் பிடித்துள்ளது.

ஊழலுக்கு எதிரான வேலைத்திட்டம் சாதாரண பெரும்பான்மையால் மாற்றுவதற்கு முடியாதவாறு, அரசியலமைப்பின் ஊடாக கட்டமையும் பொறிமுறையை ஸ்தாபிக்க வேண்டும்.

இவ்வாறு உருவாகும் பொறிமுறையின் மூலம் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டை அழித்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, இழந்த வளங்களையும், சொத்துக்களையும் நாட்டுக்கு பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம். இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி  உறுதிபூண்டுள்ளது.

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை அதிகரிப்பதன் மூலம் கல்விப் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. இதற்கு அரச நிதி போதுமானதாக இல்லை.

இதற்கு ஆக்கப்பூர்வமான வேலைத்திட்டம் தேவை. நான் மக்களுக்காக செயல்படும் தலைவர் என்பதால், எனது வேலைத்திட்டத்தை பேசுவதோடு மாத்திரம் மட்டுப்படுத்தாது அதை களத்தில் செயல்படுத்திக் காட்டியுள்ளேன்.

நான் வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறு பேசவில்லை. 41 இலட்சம் மாணவர்களுக்கும் கல்வியில் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணப்பட்டில் இருந்தே இவ்வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றேன்.

வங்குரோத்து நிலையில் இருந்து வெளி வர அறிவு சார்ந்த பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதற்கு கல்வி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கல்வித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தாது எம்மால் உலகுக்கு ஈடுகொடுத்து போட்டி உலகில் முன்னோக்கிப் பயணிக்க முடியாது.

இவ்வாறு உண்மையை உண்மையாகப் பேசும் போது சஜித் பிரேமதாசவின் ஆங்கில மொழி, வெளிநாட்டு ஏகாதிபத்திய கல்விக்கு எதிர்ப்பை தெரிவிப்போம் என கடும்போக்கு கம்யூனிச, மார்க்சிச, சோசலிச குழுக்கள் மக்களை வீதியில் இறக்கக்கூடும்.

இந்நாட்டிலுள்ள ஊழல்களில் ஈடுபடும் தலைவர்கள் தான் இதுபோன்ற விடயங்களை ஊக்குவிக்கின்றனர். தனிப்பட்ட அரசியல் நலனுக்காக மக்களை தூண்டி விடுகின்றனர்.

ஆனால் இவ்வாறு மக்களை தூண்டி விடுபவர்கள் தமது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியையே வழங்குகின்றனர். அதே சிறந்த கல்வியை நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கும் வழங்குவது அவர்களின் பார்வையில் தேச துரோகமாக அமைகிறது. நாம் நாடு குறித்தே சிந்திக்கிறோம்.

இந்த யதார்த்தங்களை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறுகிய மனநிலையில் இருந்து கொண்டு செயல்படுவது எந்த அடைவுகளையும் ஈட்டித்தராது.

யதார்த்தமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இதனாலயே நாம் கல்வியில் காலத்துக்கேற்ற மாற்றம் ஏற்பட வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறோம். தற்போதுள்ள கல்வி முறை நிச்சயம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றார்.