ஜனாதிபதி ரணில் அடுத்த மாதம் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார்

41 0

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவது உறுதி. அது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம்  அறிவிப்பார்.  தேர்தலுக்கு அனைத்து நடவடிக்கைகளும் தயார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் அடுத்த எந்த தேர்தல் இடம்பெறப்போகிறது என்ற விடயம் தற்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் விடயமாக மாறி இருக்கிறது. அதுதொடர்பில் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் அடுத்து முதலாவதாக இடம்பெற இருப்பது ஜனாதிபதி தேர்தலாகும். அதற்காக  நாங்களும் ஏனைய கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அதேபோன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

ரணில் விக்ரமசிங்க அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பதை பந்தயம் வைத்து தெரிவிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருக்கும் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள். ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்று, நாடு எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களில் தீர்வுகாண நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

இந்நிலையில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால், ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வருவார்கள் என்பது, அவர்களுக்கு தெரியும். இதனை தடுப்பதற்கே, ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிட மாடடார் என்ற பொய் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார். அது தொடர்பான உத்தியோகபூர் அறிவிப்பை அடுத்த மாதம் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார். என்றாலும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே வேட்பாளராக போட்டியிடுவார் என்ற எமது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே அறிவித்திருக்கிறோம்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராகவோ அல்லது வேறு ஒரு கட்சியுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளராக களமிறங்குவதில்லை. மாறாக அனைவருக்கும் இணைந்துகொள்ள முடியுமான தேசிய  வேட்பாளராகவே போட்டியிட உள்ளார்.

நாட்டை கட்டியெழுப்பும் திட்டம், கொள்கை அவரிடம் இருக்கிறது. அதனால் அனைவரையும் ஒன்றிணைக்க முடியுமான வேலைத்திட்டத்தை நாங்கள் தயாரித்திருக்கிறோம். அடுத்து இடம்பெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி உறுதியாகும் என்றார்.