“… The Indians agreed to this. I took a calculated risk, as I had in 1957, opposed the Bandaranaike – Chelvanyaakam Pact on this very issue. There was however the escape clause of a referendum which I hoped would mollify critics of this move, because Sinhalese and the Muslims who together constituted 60 percent of the population of the Eastern Province would not willingly accept this merger and that at a referendum the 60 percent would win” – J.R.Jayaewardene’s MEN AND MEMORIES (Page 109)
‘இரா. சம்பந்தன் அவருடைய முதுமையினால் செயற்பாட்டு அரசியலில் பங்களிப்பு செய்யமுடியாதிருப்பதன் காரணமாக பதவியை துறக்க வேண்டும். சில ஆண்டுகளுகு;கு முன்னர் அவரால் நாடாளுமன்றத்துக்கு சமுகமளிக்க முடியாத நிலைமை ஏற்பட ஆரம்பித்த சந்தர்ப்பத்தில் நான் அவரிடத்தில் நேரடியாக பதவி விலகுமாறும் கோரினேன்”.
இந்தக் கருத்து இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றில் சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்தது. இதனை தெரிவித்தவர் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன்.
”288 நாடாளுமன்ற அமர்வு நாட்களில் வெறுமனே 39 நாட்கள்தான் சம்பந்தன் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார். அவருடைய வருகை வீதம் 13.6 சதவீதமாக உள்ளது. நாடாளுமன்ற சம்பளமாக நான்கு மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள், தொலைபேசி மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவைக்காக 4,19,000 ரூபா வழங்கப்பட்டுள்ளது” என்ற விபரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தன் இப்போதும் மூன்று மாத நாடாளுமன்ற லீவில் கொழும்பு பங்களாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. சம்பந்தனின் இயலாமை பற்றிய கருத்தை சுமந்திரன் மட்டுமன்றி கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட திருமலை தமிழரசு வேட்பாளர் சண்முகம் குகதாசனும் இன்னொரு தொலைக்காட்சியில் வழிமொழிவதுபோல கூறியிருந்தார்.
”ஐயாவுடன் தொலைபேசியில் உரையாட முடியாது. ஐயா சொல்வது எங்களுக்கு விளங்காது. நாங்கள் சொல்வதை அவர் புரிய மாட்டார். அவருடைய மகன்தான் அவர் சார்பில் தொலைபேசியில் உரையாடுவார்” என்று குகதாசன் ஒரு குற்றப்பத்திரிகையையே தொலைக்காட்சிச் செவ்வியில் வாசித்தார்.
இவ்வாறு செயற்பட முடியாது நாடாளுமன்ற லீவில் இருக்கும் சம்பந்தன் கூறியதாக சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்து பல ஊடகங்களில் சில நாட்களுக்கு முன்னர் பரபரப்பாக வெளியானது. வயோதிப நிலையில் விளக்கமாக உரையாடவும், விபரமாக விளங்கிக் கொள்ளவும் முடியாதிருக்கும் அவர் மீது கரிசனை கொண்டு அவரை பதவியிலிருந்து விலகுமாறு கேட்டதாக பகிரங்கமாகத் தெரிவித்த சுமந்திரன், இப்போது அவர் தம்மிடம் தெரிவித்ததாக சில விடயங்களை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி சூடு பிடித்திருக்கும் பொதுவேட்பாளர் விடயத்தை நெருப்புக்குள் தள்ளி விட்டுள்ளார்.
சம்பந்தன் கூறியதாக சுமந்திரனால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் எங்கே, எப்போது, எவ்வாறு தெரிவிக்கப்பட்டது என்ற விபரங்கள் எங்கும் இல்லை. நம்பினால் நம்புங்கள் என்ற பாணியில் சுமந்திரன் தெரிவித்த சம்பந்தனின் கருத்துகள்(?) அமைந்துள்ளன.
சம்பந்தன் பொதுவேட்பாளர் விடயத்தில் சாதகமற்றவராக இருப்பதை இந்த அறிக்கை தெரிவிக்கின்றது. தமிழ் பொதுவேட்பாளர் கருத்துக்கு இடமளிக்க வேண்டாமென்ற கருத்தை அவர் வலியுறுத்திச் சொல்வதாக இங்கு கூறப்படுகிறது. (இதே கருத்தையே சுமந்திரன் கடந்த பல வாரங்களாக தெரிவித்து வருகிறார் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்).
தமிழரின் அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் முதன்முதலாக தமிழர் ஒருவர் பொதுவேட்பாளராக போட்டியிட வேண்டுமென்ற யோசனை பலவேறு மட்டங்களில் முனைப்புப் பெற்று நிற்கும் வேளையில் ”மூத்த தலைவர்” – ”பெருந்தலைவர்” என்ற சிறப்புப் பெயர்களுடன் வர்ணிக்கப்படும் சம்பந்தன் தமது வயோதிப நிலையில் சொன்னதாகக் கூறப்படும் கருத்துகள் இன்று பல வகைகளில் விமர்சிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக ஏற்கனவே தமிழரசுத் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும், புதிய தலைவராகத் தெரிவாகியும் பதவி ஏற்க முடியாதிருக்கும் சிவஞானம் சிறீதரனுடனும் தாம் உரையாடியதாக சம்பந்தன் கூறியதாக சுமந்திரனின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை எங்கும் சம்பந்தன் அவ்வாறு தங்களிடம் உரையாடியதாக தெரிவிக்கவில்லை. அதேவேளை இவர்கள் இருவரும் கொள்கை அளவில் பொதுவேட்பாளரை ஏற்றுக் கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் வடக்குக்குச் சென்ற அமெரிக்க தூதுவர் ஜுலி சங் அவர்களுடன் உரையாடுகையில் பொதுவேட்பாளர் தொடர்பான தமது ஆதரவு நிலைப்பாட்டைப் புரியும் மொழியில் வெளிப்படுத்தியிருந்தார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
தமிழரின் பொதுவேட்பாளராக தம்மைப் போட்டியிட வருமாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டதாக சுமந்திரன் தெரிவித்ததும், அவ்வாறு தாம் ஒருபோதும் சுமந்திரனைக் கேட்கவில்லையென சுரேஷ் பிரேமச்சந்திரன் மறுத்ததும் சுவாரஸ்யமான ஒரு குறு நாடகம். இருவருமே மக்களின் நம்பிக்கையை இழந்தவர்களாக இருப்பினும், இதில் யாரோ ஒருவர் மட்டும்தான் பொய் சொல்பவராக இருக்க வேண்டும். அவர் யார் என்பதை இலகுவாகக் கண்டு கொள்ளலாமெனத் தமிழரசு வீட்டைச் சேர்ந்த கிழக்கு மாகாண பிரமுகர் ஒருவர் தமது சகாக்களிடம் தெரிவித்துள்ளார்.
சுமந்திரனின் அரசியல் நேர்மை பற்றி ஆராய்வதற்கு முன்னர் சம்பந்தன் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்தின் முரண்பாடுகள் முதன்மை பெறுகின்றன.
சம்பந்தன் அவர்கள் ஒஸ்லோ பிரகடனம் என்ற ஒரு சொல்லாடலை பயன்படுத்தியுள்ளார். அவ்வாறு ஒரு பிரகடனம் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. அது ஒரு அறிக்கை மட்டுமே. இதனை விடுதலைப் புலிகளின் தலைவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒஸ்லோ அறிக்கையானது ஆறு கட்டப் பேச்சுவார்த்தையுடன் முடிவுக்கு வந்தது. இதனை ஏனோ சம்பந்தன் புரிந்து கொள்ளவில்லை.
ராஜிவ் – ஜே.ஆர். ஒப்பந்தம் என்பது சமஷ்டி முறையில் வடக்கும் கிழக்கும் இணைந்த தீர்வுக்கு இணக்கம் காணப்பட்டதாக சம்பந்தன் சொன்னார் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். 1987 யூலை ஒப்பந்தத்தில் அப்படி எதுவுமே இருப்பதாக எவருக்கும் தெரியாது. மாகாணசபை நிர்வாகத்துக்காக வடக்கையும் கிழக்கையும் ஆரம்பத்தில் தற்காலிகமாக இணைத்து ஒரு மாகாண சபையை அமைக்க இந்த ஒப்பந்தம் வழிசமைத்தது.
1990ம் ஆண்டு முதலாவது வடகிழக்கு மாகாணசபை கலைந்த பின்னர், இன்றுவரை அது காணாமல் போனதாகவே உள்ளது. வடக்கு கிழக்கு மாகாண சபைக்காக தற்காலிக இணைப்பை நரித் தந்திரமாக ஜே.ஆர்.ஜெயவர்த்தன இறுதி நேரத்தில் ஒப்பந்தத்தில் புகுத்தினார். இதனை அவரே தமது சுயசரிதையில் நேர்மையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், 1992ம் ஆண்டில் ஆநn யனெ ஆநஅழசநைள என்ற பெயரில் எழுதிய சுயசரிதை நூலின் 109ம் பக்கத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு இணைப்பை தற்காலிகமானது என்றும், கிழக்கு மாகாண மக்களிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ள இவர், கிழக்கு மாகாண சனத்தொகையில் சிங்களவரும் முஸ்லிம்களும் அறுபது வீதமாக இருப்பதால் சர்வஜன வாக்கெடுப்பில் இணைப்பு வெற்றி பெறாது என்றும் தெட்டத்தெளிவாக தெரிவித்துள்ளார். அந்த வரிகள் பின்வருமாறு:
‘I suggested that a temporary joinder should have a time-limit and that a referendum be held in the Eastern Province to decide whether or not people there wished their Province to be linked to the Northern Province. The Indians agreed to this. I took a calculated risk, as I had in 1957, opposed the Bandaranaike – Chelvanyaakam Pact on this very issue. There was however the escape clause of a referendum which I hoped would mollify critics of this move, because Sinhalese and the Muslims who together constituted 60 percent of the population of the Eastern Province would not willingly accept this merger and that at a referendum the 60 percent would win” – J.R.Jayaewardene’s MEN AND MEMORIES (Page 109)
இதில் குறிப்பிடப்படும் இணைப்பு சாத்தியப்படாத வகையில் இலங்கை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அவரது அனுசரணையுடன் ஜே.வி.பி.யினர் தாக்கல் செய்த வழக்கொன்றில் ஆட்சித் தரப்பின் செல்லப்பிள்ளையாக இருந்த பிரதம நீதியரசர் சரத் என்.சில்வாவே வடக்கு கிழக்கு இணைப்பை இரத்துச் செய்யும் தீர்ப்பை வழங்கினார் என்பதை சம்பந்தன் வயோதிபம் காரணமாக மறந்துவிட்டார் போலிருக்கிறது.
கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது வருடாந்தம் நீடிப்பதைத் தவிர வேறு வழியில்லையென ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமக்குள் நொந்து கொண்டாரென்று சம்பந்தன் ஜே.ஆருக்காக வக்காலத்து வாங்கியிருப்பதை சுமந்திரனின் அறிக்கையில் காணக்கூடியதாக உள்ளது. இந்த வரிகளை உண்மையிலேயே சம்பந்தன் சொன்னாரா அல்லது அதனை வெளியிட்டவரின் இடைச்செருகலா என்றுகூடச் சந்தேகம் எழுகிறது.
வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முக்கிய மூன்று வேட்பாளர்களும் ஐம்பது வீத வாக்குகளை பெற முடியாது போகும் நிலைப்பாடு இன்று காணப்படுகிறது. அப்படியானால் தமிழர் தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்த நிறுத்தும் பொதுவேட்பாளர் பெறும் வாக்குகள் சம்பந்தன் கூறுவதுபோல விசப்பரீட்சையாக இருக்க முடியாது. இது பலப்பரீட்சையாகவே அமையும்.
ஜனாதிபதிப் பதவியைப் பெறுவதற்காக பொதுவேட்பாளர் நிறுத்தப்படவில்லை. தமிழரின் அரசியல் அபிலாசைகளைப் பூகோள பரப்புக்குத் தெரிவிப்பதே இதன் அடிப்படை நோக்கம். இவைகளைப் புரிந்து கொள்ளாமல், தமது தமிழரசுக் கட்சியையே பிளவுபடுத்தும் நோக்கில் சம்பந்தன் அவசரப்பட்டுத் தமது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அழைக்கும் போதெல்லாம் ஓடிச் சென்று முன்னால் நிற்கும் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜாவை இம்முறை அழைத்தபோது, சுகயீனம் காரணமாக வரமுடியவில்லை என்று சொன்னதிலிருந்து சம்பந்தன் தமது தற்போதைய இறக்கத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எழும் கேள்வி, சுமந்திரன் தெரிவித்த கருத்துகள் உண்மையாகவே சம்பந்தன் சொன்னவைதானா என்பது. சிலவேளை அவர் சொன்ன கருத்துகளைத் தமது விருப்புக்கு ஏற்றவாறு சுமந்திரன் கூட்டிக் கழித்திருக்கலாமென்றும் கருத இடமுண்டு. முக்கியமாக, இந்த அறிக்கையில் சம்பந்தன் ஒப்பமிடாததால் அது அதன் நம்பகத்தன்மையை இழந்து நிற்கிறது என்பதே யதார்த்தம்.
பனங்காட்டான்