இறந்து போன தனது குட்டியை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக தன் உடலோடு சுமந்து கொண்டுள்ளது சிம்பன்சி குரங்கு ஒன்று. ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள பயோபார்க் உயிரியல் பூங்காவில் இந்த குரங்கு உள்ளது.
அந்த சிம்பன்சி குரங்கின் பெயர் நடாலியா என அறியப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. பிறந்த சில நாட்களில் அந்த குட்டி இறந்துள்ளது. இருந்தும் அதனை விட்டுப் பிரிய மனம் இல்லாத நடாலியா, அப்போது முதலே அதை தன்னோடு வைத்துக் கொண்டுள்ளது.இது சிம்பன்சி குரங்குகளின் வழக்கமான நடவடிக்கை என்றும், மிருகக் காட்சி சாலை என்று மட்டுமல்லாமல் அடர் வனப் பகுதிகளில் வசித்து வரும் சிம்பன்சி மத்தியிலும் இந்த நடத்தையை பார்க்க முடியும் என்றும் பயோபார்க்கின் உயிரியல் பூங்காவின் தலைவர் மிகுவல் காஸரேஸ் தெரிவித்துள்ளார். அதன் இழப்புக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களைப் போலவே சிம்பன்சி குரங்குகளும் தங்களுக்கு நெருக்கமானவர்களின் மரணத்துக்கு வருந்தும். என்ன அந்த செயல்முறை மிகவும் நீண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எங்கள் உயிரியல் பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்கள், இறந்து போன குட்டியுடன் நடாலியா இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதற்கான காரணத்தை அவர்களிடத்தில் நாங்கள் விளக்கினோம். மேலும், அது எங்களது கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிப்போம்” என காஸரேஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ல் இதே போல ஒரு குட்டியை நடாலியா இழந்ததாக பயோபார்க் தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சிம்பன்சி குரங்கு இனம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு மற்றும் நோய் உள்ளிட்ட பாதிப்புகளால் இந்த இனம் அழிவை எதிர்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.