போலியான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று (21) நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் இடம்பெற்ற பின்னணியில், டயனா கமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இடம்பெற்ற தருணத்தில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்தில் பிரசன்னமாகவில்லை.
இந்நிலையில், 5 இலட்சம் ரூபா ரொக்க பிணை மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
போலியான தகவல்களைச் சமர்ப்பித்து கடவுச்சீட்டு தயாரித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட டயனா கமகே தனது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் நீதிமன்றில் முன்னிலையாகியதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.