அண்மையில் இலங்கைக்கு வருகைதந்திருந்த இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர், இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவது குறித்து ஜனாதிபதி, எதிர்க்கட்சித்தலைவர், ஏனைய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் கடந்த 2 – 9 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். நோர்வே மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு பிணைப்புக்களை மேலும் வலுப்படுத்துவதில் இவ்விஜயம் முக்கிய இடம்பிடித்துள்ளது. இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித்தலைவர் வசஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் மே-எலின் ஸ்டெனர் காத்திரமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போது, இலங்கையில் நோர்வே முதலீடுகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் பாராட்டத்தக்க வளர்ச்சி தொடர்பில் தூதுவர் ஸ்டெனருக்கு விளக்கமளிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் பரஸ்பர நலன்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான கூட்டுறவைப் பேணுவதில் தமது அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீளுறுதிப்படுத்தினர்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான கலந்துரையாடல்களின்போது இலங்கையில் நோர்வேயின் நேரடி முதலீடுகள் மற்றும் அதிகரித்த எண்ணிக்கையிலான சுற்றுலாப்பயணிகளின் வருகையின் நேர்மறை போக்குகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. நல்லிணக்க முயற்சிகள், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் நோர்வே அபிவிருத்தி முயற்சிகள் போன்ற ஏனைய முக்கியமான விடயங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணி உறுப்பினர்களுடனும் ஆழமான கலந்துரையாடல்களில் தூதுவர் ஸ்டெனர் அவர்கள் ஈடுபட்டார். குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சமுத்திர விவகாரங்கள் மற்றும் சுழற்சிப் பொருளாதார முயற்சிகளில் ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து ஆராயப்பட்டதுடன், இலங்கையின் பொருளாதார முன்னுரிமைக்குரிய விடயங்கள் பற்றியும் பேசப்பட்டது.
பன்முகப்பட்ட அரசியல் களத்தை ஏற்றுக்கொள்ளும் வகையில், இலங்கையின் அபிவிருத்திப் பயணத்தில் கணிசமான கருத்துக்களை பரிமாறிய அனுரகுமார திசாநாயக்கவுக்கு தூதுவர் ஸ்டெனர் அவர்கள் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். மேம்பட்ட ஒத்துழைப்புக்காக வாய்ப்புக்கள் காணப்படும் துறைகளை இனங்கண்டு, இலங்கையின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்புக்களை வலுப்படுத்தும் மார்க்கங்களை இருதரப்பினரும் ஆராய்ந்தனர்.
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வளர்ப்பதில் நோர்வேயின் உறுதியான அர்ப்பணிப்பை தூதுவர் ஸ்டெனரின் விஜயம் வெளிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கான நோர்வே நாட்டின் பிரதி தூதரக அதிகாரி மனோ சேகரம் மற்றும் தூதரக அலுவலகமும் இச்சந்திப்புக்களுக்கான உதவிகளை வழங்கியிருந்தனர்.