நாட்டில் ஆரம்பமாக பொதுத் தேர்தலே இடம்பெறும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். இவர்கள் தங்களின் சுயநல அரசியல் நோக்கத்திலே இவ்வாறான பிரசாரத்தை மேற்கொள்கின்றனர்.
ஆனால் ஜனாதிபதி தேர்தலுக்கே ரணில் விக்ரமசிங்க தயாராகி வருகிறார் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களின் பணிப்பாளருமான சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தவில் திங்கட்கிழமை (20) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டில் ஆரம்பமாக பாராளுமன்ற தேர்தலே இடம்பெறும் என ஒருசிலர் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜூன் மாதம் நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என உதயங்க வீரதுங்க தெரிவிக்கிறார்.
பாராளுமன்ற தேர்தலே ஆரம்பாக இடம்பெறும் என்பதை உறுதியாக தெரிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தார்.
அதேநேரம் அடுத்துவரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட மாட்டார் என சிலர் பிரசாரம் செய்து வருகின்றனர்.
இவ்வாறு தங்களின் அரசியல் நிகழ்ச்சிட்டத்தின் அடிப்படையில் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசியல் அமைப்பின் பிரகாரம் செப்டம்பர் 18ஆம் திகதி்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் முன்னர் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதேநேரம் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது.ஆனால் நாடும் அரசாங்கமும் ஜனாதிபதி தேர்தலுக்கே தயாராக வருகின்றன. ஜனாதிபதியும் ஜனாதிபதி தேர்தலுக்கே தயாராகி வருகிறார்.
அத்துடன் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் கட்சி சம்மேளனத்தின்போதும் இதனை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அதனால் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சிலர் தெரிவித்து வருகின்றனர்.
வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில், ரணில் விக்ரமசிங்கவே முன்வந்து, பாரிய சிரமத்துக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்தார்.
அதனால் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ரணில் விக்ரமசிங்கவே மிகவும் தகுதியானவர். அவர் போட்டியிடுவதை யாராலும் தடுக்க முடியாது.அவருக்கே மக்கள் ஆணை இருக்கிறது என்றார்.