18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது.
பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினை பேரணி வந்தடைந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை அரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 14.04.2009 அன்று புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி மயூரன் மற்றும் 21.01.2009 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி செந்தூரன் ஆகியோரின் சகோதரரும் ,ஏழு சொந்தங்களை இனவழிப்பின் போது பறிகொடுத்தவருமான செல்வன் செல்லத்தம்பி நிறோஜன் அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை 13.07.2008 அன்று மன்னார் பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த போர் உதவிப்படை வீரர் சுப்பிரமணியம் சத்தியபாலன் அவர்களின் மகன் செல்வன். சத்தியபாலன் மயூரன் அவர்களும் பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நேரடிச் சாட்சியமாக விளங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர். அகவணக்கத்தோடு டோட்முண்ட் (Dortmund) தமிழாலய மாணவன் ஸ்ரேபான் அயூடிக் வசந்தராஜ் அவர்களதும், லிவக்கூசன் (Leverkusen) தமிழாலய மாணவி சித்திரா வினோதன் அவர்களுதும் கவி வணக்கமும் மதரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கமும் இடம்பெற்றது.
நினைவு வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய விளக்க உரை வழங்கப்பட்ட பின்பு முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களின் சுவடுகள் எனும் தலைப்பில் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார். இன அழிப்பின் வலிகள் நிறைந்த பாடலிற்கு Frankfurt நகரின் இளைய மாணவர்கள் உணர்வோடு நடனம் வழங்கிய பின்னர் ஐரோபிபிய நாடாளுமன்ற உறுப்பினர் Frau ஒஸ்லேம் டிமீறல் அவர்களின் சார்பில் திரு. Hannis Dräger அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் உரையாற்றினார். யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலே திறவுகோல் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையினை வழங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரனிடமிருந்து நூலின் முதல் பிரதியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Dortmund நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
நூலின் இரண்டாவது பிரதியைப் பெற்றுக்கொண்ட திரு. Albert Koolen அவர்கள் நினைவுரையினையும் வழங்கினார். யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் யேர்மன் மொழியிலான நாடகம் பார்த்தோர் மனங்களை நெகிழச் செய்தது. யேர்மன் கலை பண்பாட்டுக் கழக அசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் “ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா” எனும் பாடலிற்கு உணர்வுபொங்க நடனமாடினர். தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் அனைத்துலகத்தொடர்பகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகளில் யேர்மன் நாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.மதிப்பளிப்பினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 ஆவது ஆண்டின் வணக்க நிகழ்வில் சிறப்புரையினை திரு. இரா. கதிரவன் (விபி)அவர்கள் வழங்கினார். தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது.