அரசாங்கம் இராணுவத்தினருக்கு கடமையை தவறியுள்ளது

30 0

அரசாங்கம்  இராணுவத்தினருக்கு கடமையை செய்ய தவறியதால் அவர்கள் ரஷ்ய யுத்தக்களத்தில் முன்னணியில் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

காலி நெலுவ பிரதேசத்தில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

முப்பது வருட கால பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டதன் பின்னர் இராணுவ சமூகத்துக்கு செய்யவேண்டிய முறையான கடமை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை மீண்டும் சிந்தித்து பார்க்க வேண்டும். இராணுவ வீரர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாரிய கஷ்டத்துக்கு ஆளாகி இருப்பதுடன் தாங்கிக்கொள்ள முடியாத பொருளாதார சமூக நெருக்கடிக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.

நாட்டுக்காக தங்களின் உயிரை பணயம்வைத்து அரப்பணித்த இராணு வீரர்கள் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, அவர்கள் எதிர்பார்த்த நிவாரணங்கள் இல்லாமல் போனதால் இராணுவ வீரர்கள் வறுமை கோட்டின் கீழ் மட்டத்துக்கு சென்றுள்ளனர். அதனால் அவர்கள் வேறு வருமான வழிகளை தேடி வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். வேறு சிலர் ரஷ்யாவுக்கு சென்று, அங்கு யுத்த களத்தின் முன்வரிசைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ரஷ்யாவில் யுத்த களத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் அதிகமானவர்கள் அங்கு உயிரிழந்துள்ளனர். அரசாங்கம் இராணு வீரர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியான முறையில் செய்ய தவறியமையே இதற்கு காரணமாகும். அதனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இராணு வீரர்களுக்கு வழங்கவேண்டிய அனைத்து நிவாரணங்கள் மற்றும் சிறப்புரிமைகளை பெற்றுக்கொடுப்போம் என்றார்.