முக்கியமான சட்டங்கள் இயற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் ரணிலுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவில்லை

31 0

முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலில் போட்டியிடபோவதில்லை. அவருக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கவும் போவதில்லை என மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினரும், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவருமான உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.

கொழும்பில்  ஞாயிற்றுக்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடுவது  பேச்சுக்கு மாத்திரமே வரையறுக்கப்படும்.ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலே நடத்தப்படும் என்பதை உறுதியாக குறிப்பிடுகிறேன். முக்கியமான சட்டங்களை இயற்றிக் கொண்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும்.

எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முற்பட்ட தினத்துக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படும்.அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுபவர் இந்த பாராளுமன்றத்தை நிச்சயம் கலைப்பார்.புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைப்பதில் எவ்வித பாதி;ப்பும் ஏற்படாது.

ஜனாதிபதிக்கும்,பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பலவிடயங்கள் பேசப்பட்டன. பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னுரிமை வழங்கியுள்ளமையால் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதை பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார்.ஒருவேளை அவர் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன தீர்மானிக்கவுமில்லை.எமது வேட்பாளரை நாங்கள் களமிறக்குவோம் என்றார்.