நுவரெலியாவில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நடமாடும் சேவை!

35 0

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நுவரெலியாவில் கடந்த 17 மற்றும் 18ஆம் திகதிகளான இரண்டு நாட்களிலும் மக்கள் நடமாடும் சேவை ஏற்படுத்தப்பட்டிருந்தது.

நுவரெலியாவுக்கு ‘மாதிரி SMART எதிர்காலம்’ எனும் தொனிப்பொருளில் மக்கள் நடமாடும் சேவை இடம்பெற்றது.

நுவரெலியா மாநகர சபை (சினி சிட்டா) பொது மைதான மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்த ‍சேவையின் முதல் நாள் நிகழ்வு கலை, கலாசார முறைப்படி சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நுவரெலியா மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திசாநாயக்க, சீ.பீ. ரத்நாயக்க, நிமால் பியதிஸ்ஸ உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மேலும், கலை, கலாசார நிகழ்வுகள், பரிசளிப்பு மற்றும் சான்றிதழ்கள் வழங்கல் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் தொழில் திணைக்களம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், இலங்கை மத்திய வங்கி, ஊழியர் நம்பிக்கை நிதியம், தொழிற்பயிற்சி நிலையங்கள், தேசிய தொழில்சார் கற்கை நிறுவனம், தேசிய தொழில்  பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் ஆகியவற்றுடன் அரச வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், அனுமதி பத்திரம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், சிறு தொழில் அபிவிருத்திப் பிரிவு, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு ஆகியவற்றின் ஊடாக பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் என 12 சேவைகள் இந்த நடமாடும் சேவையில் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த இலவச சேவைகளை பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொது மக்கள் என பலரும் பெற்றுக்கொண்டனர்.