மழை குறைவடையும் நாள் குறித்து அறிவிப்பு

49 0

இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் மீள் அறிவித்தல் வரை சிறிய படகுகளின் ஊடாக மீன்பிடியில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

கடற்பரப்பில் ஏற்படும் வானிலை மாற்றங்களை கருத்திற்கொண்டு இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்​ைசுசந்த கஹவத்த தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளம் மாவட்டத்தில் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் அதன் அளவு 212.5 மில்லி மீற்றராகும்.

இலங்கையை அண்டிய கடற்பரப்புகளை சூழவுள்ள பருவமழைக்கு முந்தைய காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பலத்த மழை பெய்து வருகின்றது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்துள்ளதுடன், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழை பெய்துள்ளது.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தற்போது மழை பெய்து வருகின்றது.

இதேவேளை, கடும் மழையுடன், ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் உல்ஹிட்டிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நேற்று (18) மாலை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பேருவளையிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமைக்குப் பிறகு நிலவும் மழையின் அளவு குறையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.