மாடு கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 7 பேருக்கு விளக்கமறியல் !

47 0

பிலியந்தலை மொரட்டுவ வீதியில் கைது செய்யப்பட்ட பசு கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் 07 பேரும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் பிலியந்தலை பொலிஸார் வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிலியந்தலையிலிருந்து மொரட்டுவை நோக்கிச் சென்ற வேனை  நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

எனினும், பொலிஸாரின் உத்தரவையும் மீறி  வேன் முன்னோக்கிச் சென்றதையடுத்து, பொலிஸார் வேனை பின் தொடர்ந்தனர் .

குறித்த வேனை சோதனையிட்ட போது சில வாள்கள், வெடிகுண்டுகள் மற்றும் கயிறுகள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் விசாரணையில் அந்த வேன் மாடுகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரியவந்துள்ளது .

இது தொடர்பான விசாரணையில், மாடு கடத்தல் தொடர்பான பல தகவல்கள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது .

சந்தேக நபர்கள் இந்த மாடுகளைக் கடத்துவதற்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வேன்களை பயன்படுத்தியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் நீண்ட காலமாக  பல்வேறு பகுதிகளிலிருந்து மாடுகளைத் திருடி வேறு பகுதிகளுக்குச் சென்று அந்த மாடுகளை விற்பனை செய்து வந்துள்ளனர்.

அதன்படி இதுவரை சுமார் 90 மாடுகள் திருடப்பட்டுள்ளதாகச் சந்தேக நபர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாவனல்லை, காலி, வத்தளை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அந்த  மாடுகள்  விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களால் மேற்கொள்ளப்பட்ட 19 மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஐஸ் போதைப்பொருளுக்கு அதிக அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.