தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது

44 0

ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் தொடர் மழை காரணமாக குளுகுளு சீசன் களை கட்டியுள்ளது. இந்த சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை நேரத்தில் இருந்தே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. அவர்கள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகின்றனர்.ஏற்காட்டில் வருகிற 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை கோடை விழா மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதையடுத்து தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்கனவே 50ஆயிரம் பூந்தொட்டிகளில் ஜினியா, டேலியா, சால்வியா, கார்னேசன், ஜெர்பெரா, பெர்குன்யா, டெல்பீனியம், டிராகன் உட்பட 50 வகையான மலர்கள், 112 ரகங்களில் நடவு செய்யப்பட்டது.

தற்போது அந்த மலர்கள் பூத்துக் குலுங்குகிறது. இதேபோல் அண்ணா பூங்கா, ரோஜா பூங்கா ஆகிய இடங்களில் பல்வேறு வகையான ரோஜாக்களும் நடவு செய்யப்பட்டு தற்போது அைவகளும் பூத்துக் குலுங்குகிறது.ஏற்காட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பூத்துக் குலுங்கும் பலவண்ண மலர்களை கண்டு ரசித்து போட்டோ, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் அண்ணா பூங்காவில் உள்ள ஊஞ்சலில் விளையாடி குழந்தைகள் பொழுதை கழித்தனர்.

படகு இல்லத்திலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டனர். இதனால் அந்த பகுதியே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. படகு சவாரி செய்ய பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். தற்போது டிசம்பர் மாதத்தில் இருப்பது போன்ற சீதோசண நிலை இருப்பதால் ஏற்காடு ரம்மியமாக காட்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழை காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் பசுமையுடன் காட்சி அளிக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் ஏற்காடு நகரமே போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறியது.

ஓட்டல், பேக்கரி, பஜ்ஜி கடைகளில் சுடச்சுட சுற்றுலா பயணிகள் மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டனர். மேலும் ஏற்காட்டில் விளையும் காய்கறிகளையும் சுற்றுலா பயணிகள் வாங்கி சென்றனர்.

அதிகளவில் சுற்றுலா பயணிகள் திரண்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.அடுத்த வாரம் கோடை விழா தொடங்க உள்ள நிலையில் இனிவரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. மேலும் மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் வாகனங்களை கவனமாக இயக்கவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.