மௌனித்த பல கதைகள் நீடித்த அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

28 0

நீதி, சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதில் ஈடுபாட்டுடன் போராடும் இலங்கை மக்களின் உறுதியான பங்காளியாக அமெரிக்கா என்றும் இருக்கும் என்று தெரிவித்துள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மௌனிக்கப்பட்ட பல  கதைகள் நீடித்த அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரச படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான மூன்று தசாப்த கால போர்  முடிவடைந்து 15 வருடங்கள் ஆகின்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இவ்வாறானதொரு நிலையில் வடக்குக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க தூதுவர் ஜூலி சங், யாழ்ப்பாணத்தில் அரச மற்றும் சிவில் தரப்புகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

குறிப்பாக உள்நாட்டுப் போரின்போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர், முன்னாள் போராளிகள் மற்றும் முன்னாள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டக் கைதிகளின் குடும்பங்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். அன்புக்குரியவர்களை நினைவுகூர அனைத்து குடும்பங்களுக்கும் உரிமை உண்டு என இதன்போது தெரிவித்திருந்த அமெரிக்க தூதுவர், மௌனித்த இவர்களின்  கதைகள் நீடித்த அரசியல் தீர்வின் அவசியத்தை வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகளை நினைவுகூர்ந்து அமெரிக்க தூதுவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகளை நிறைவடைந்துள்ளது. ஐக்கியப்பட்ட எதிர்காலத்துக்கான பின்னடைவு மற்றும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் அமெரிக்கா துணை நிற்கிறது. நீதி, சம உரிமைகள் மற்றும் சம வாய்ப்புகளை பெற்றக்கொள்வதில் ஈடுபாட்டுடன் போராடும் இலங்கை மக்களின் உறுதியான பங்காளியாக அமெரிக்கா என்றும் இருக்கும்.

நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்துக்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்துக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.