விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

263 0

விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி தொடங்க முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநிலத்தின் ஒட்டு மொத்த மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார முன்னேற்றத்தை மேம்படுத்த இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நகர்புற மக்களுக்கு இணையாக கிராமப்புற மக்களுக்கும் மருத்துவசதி கிடைக்கும் வகையில், கிராமப்புறங்களிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துதல், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், மருத்துவமனைகளுக்கு புதிய கட்டங்கள் கட்டுதல், புதிய மருத்துவ நிலையங்களை ஆரம்பித்தல் போன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

இது தவிர, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகள், 152 வட்ட மருத்துவமனைகள் மற்றும் 10 வட்டம் சாரா மருத்துவமனைகளில் பல் மருத்துவ பிரிவு நிறுவப்பட்டு, பல் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பல் பராமரிப்பின் அவசியத்தை கிராம மக்களுக்கு உணர்த்தும் வகையில் 44 வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் 249 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாட்டில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி மட்டுமே சென்னையில் உள்ளது. சென்னை தவிர வேறு எங்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரி தொடங்கப்படவில்லை என்ற குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அம்மா அவர்கள் தென் தமிழகத்தில் ஒரு புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி 50 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்படும் என்று 25.8.2015 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தென் தமிழகத்தில் உள்ள மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி ஒன்று தொடங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்குவதற்காக ஒரு கல்லூரி முதல்வர் பதவியினை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கை மூலம் தென் தமிழக மாணவர்கள் அதிக அளவில் பல் மருத்துவம் பயிலுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.